2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

யாழில் காசநோய் பாதிப்பு அதிகம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்டத்தில் காசநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன்,  இவ்வருடத்தில்  04 பேர் காசநோயால் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் எஸ்.டினோஸ்கூஞ்ஞ  தெரிவித்தார்.

யாழ். பிராந்திய சுகாதாரப் பணிமணையில் செவ்வாய்க்கிழமை (25)  நடைபெற்ற காசநோய் வார நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'இவ்வருடத்தின்  மார்ச் மாதம்வரையில் இந்த 04 பேரும் உயிரிழந்துள்ளமையானது  கடந்த வருடங்களை விட அதிக எண்ணிக்கையாகும். ஏனெனில், யாழ். மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு 14 பேரும் 2011ஆம் ஆண்டு 11 பேரும் 2012ஆம் ஆண்டு 13 பேரும் 2013ஆம் ஆண்டு 14 பேருமே காசநோயால் உயிரிழந்தனர். இவ்வருடம் ஆரம்பித்த  03 மாதங்களில்  04 பேர் உயிரிழந்துள்ளமையானது  யாழ். மாவட்டத்தில் காசநோய்த் தாக்கம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

மேலும், யாழ். மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு 419 பேரும்; 2011ஆம் ஆண்டு 351 பேரும் 2012ஆம் ஆண்டு 319 பேரும் 2013ஆம் ஆண்டு 266 பேரும் காசநோய்த் தாக்கத்திற்குள்ளாகியிருந்தனர். வேலணை நல்லூர் ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில்  காசநோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது.

மேலும்,  மாணவர்கள் மத்தியிலும் காசநோயின்; ஆரம்பத் தாக்கம் அதிகரித்துள்ளது.  இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு மருந்துவப் பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு தீர்மானித்துள்ளோம்' என்றார். 

இங்கு யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பளார் ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

'மலேரியா, விலங்கு விசர் நோய் ஆகியன யாழ். மாவட்டத்தில் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், இங்கு காசநோய் பாரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. காசநோயை இனங்காண முடியாதவர்கள் சளிப் பரிசோதனை மூலம் இனங்காணப்பட  வேண்டும்.
சளிப் பரிசோதனை மூலம் காசநோயை முற்றாக குணமாக்கமுடியும். இதற்கு மக்களும்; விழிப்பாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் 02 வருடங்களில் காசநோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .