2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கைகளை மீறிப் போய்விட்டது வடமாகாணசபை: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாணசபை தமது கைகளை மீறிப் போய்விட்டதென கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

சொன்டா கிளப்பினால், யாழ். அரியாலை கிழக்கு பகுதியில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  15 வீடுகள் பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை  (20) கையளிக்கப்பட்டன.

மேற்படி வீடுகளை பயனாளிகளிடம் கையளித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மிக நீண்டகாலமாக அடிப்படைத் தேவைகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் அரியாலை கிழக்குப் பகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும். மக்களுக்கான வீட்டுத்திட்டம், வீதி புனரமைப்பு என்பவை பூர்த்தி செய்யப்படும்.

அரியாலை கிழக்குப் பகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் எனக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில், பல உதவித் திட்டங்களை இங்கு நான் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளேன்.

மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாணசபை எமது கைகளை மீறிப் போய்விட்டது. தற்போது மாகாணசபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டிக் கொண்டு, மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் குறுக்கே நிற்கின்றனர்.

இருந்தபோதிலும், இம்முறை அதிகளவான நிதி வடமாகாணத்தின் அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக அரியாலை கிழக்குப் பகுதி மக்களுக்குத் தேவையான வீட்டுத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக 15 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. ஏனைய மக்களுக்கு இந்தியன் வீட்டுத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

மேலும், மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ள பிரதான வீதி  விரைவில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளும் செய்யப்படவுள்ளன. அது தவிர, மக்களுக்கான போக்குவரத்துச் சேவையை சீராக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இதற்கு மக்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீண்டும் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது' என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--