2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

100 நாள் திட்டத்தில் தமிழர்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்  

புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
 
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி, பாடசாலை அதிபர்  க.கண்ணன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்தக் கோட்டப் பிரிவிலுள்ள பாடசாலைகளை கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டோம். அடிப்படை வசதிகளின்றி கொட்டகைக்குள்ளும் படங்கின் கீழும் இயங்கிய பாடசாலைகள் தொடர் வேலைத்திட்டத்தின் மூலம் இன்று மருதங்கேணி கோட்டத்தில் பாடசாலைகள் அபார வளர்ச்சி கண்டுள்ளன' என்றார்.

இங்குள்ள 19 பாடசாலைகளில் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்ட உடுத்துறை மகா வித்தியாலயத்திலிருந்து தனித்து ஆரம்பிக்கப்பட்ட உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையை தவிர அனைத்து பாடசாலைகளுக்கும் கட்டடங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சில பௌதீக வளங்களை முடிந்தளவு செய்து கொடுத்துள்ளோம்.  

தற்போது அதிகாரத்துக்கு வந்துள்ள மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நாங்கள் இல்லை. எமக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் மட்டுமே அபிவிருத்திக்கு ஒதுக்க முடியும். 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் பல்வேறு தேவைப்பாடுகள் இங்கு இருந்தன. கணிசமானவற்றை கடந்த கால அரசின் ஊடாக நாம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

புதிய அரசாங்கம் 100 நாள் புரட்சி வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதனை நிறைவேற்ற சகல அரசியல் பிரதிநிதிகளிடம் ஆதரவை வேண்டி நிற்கின்றது. தேர்தல் காலத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கண்டனங்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X