Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறவன்புலவு பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகள் இல்லாத வகையில், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தைத் தொடர்ந்து அமைப்பதற்கு, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
மறவன்புலவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் காற்றாலைகள் தொடர்பில் ஆராயும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (07) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, மக்கள் குடியிருப்புக்கு மிக அண்மையாக அமையவுள்ள காற்றாலை கோபுரங்களில் ஒரு கோபுரத்தை மாற்றியமைக்கவும் மற்றுமொரு காற்றாலை கோபுரத்தை குடியிருப்புக்கு அப்பால் கொண்டு செல்லவும், காற்றாலை நிறுவனத்துடன் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டது.
மேலும், குடியிருப்புகளுக்கு மேலாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்ட அதிக வலுக்கொண்ட மின்சார கேபிள்களை, குடியிருப்பு அல்லாத பகுதியில் மாற்றுவதற்கு, இலங்கை மின்சார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு அண்மையில் குடியிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை, காற்றாலை நிறுவனம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற முன்மொழிவையும், அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, இந்த விடயத்தை கிராம மக்கள் சார்பாக காற்றாலை நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கு, மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
அத்துடன், காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக, மறவன்புலவு பகுதியில் அழிக்கப்பட்ட மேய்ச்சல் தரைகளையும் கண்டல் தாவரங்களையும் பயன்தரு மரங்களையும் மீள உருவாக்குவதற்கும் கிராமிய, பிரதேச சபை வீதிகளை மறுசீரமைப்பதற்கும் காற்றாலை நிறுவனத்தால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Jan 2026