2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கொரோனா அச்சுறுத்தலால் திருமணம் இடைநிறுத்தம்

Gavitha   / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை நகரத்தைச் சேர்ந்த குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, திருமணம் இடைநிறுத்தப்பட்டது என்றும் மணமக்கள் அவர்களது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை நகரத்தைச் சேர்ந்த மணமக்களுக்க, எதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், இந்த மணமக்களின் உறவினர் ஒருவர், தனது 6 வயது பிள்ளையுடன், கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு வந்துள்ளார்.

கொரோனா அபாய வலயமாக இருக்கும் கொழும்பில் இருந்து வந்திருந்தமையால், அவரை சுய தனிமையில் இருக்குமாறு, பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியிருந்தனர்.

எனினும், அந்த அறிவித்தலை மீறி, கடந்த தினங்களில் மணமக்கள் வீடு உட்பட பல இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

குறித்த நபருக்கு ஏற்கெனவே பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று (18) அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனினும், இது தொடர்பில் அவருக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், திருமண வீட்டில் நடைபெற்ற பொன் உருக்கல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற சுகாதாரப் பிரிவினர், அவர் மணமக்கள் வீட்டில் உள்ளார் என்பதை அறிந்து, அங்கு தேடிச்சென்று, அவருக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறித்து அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது திருமணத்தை, சுகாதார பாதுகாப்பு காரணமாக இடைநிறுத்துவதாக மணமக்கள் அறிவித்ததாகவும் 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பிசிஆர் பரிசோதனை முடிந்த பின்னர், தங்கள் திருமணத்தை நடத்துவதாக தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .