2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மயானங்களைக் அகற்றக் கோரிய போராட்டம் தொடர்கிறது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிமனைக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி, தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தூர் கலைமதி பிரதேச மக்கள், ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை இன்று  தொடர்ந்துள்ளனர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ள குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், வேறு பிரதேச மக்களும் தமது ஆதாரவினை தெரிவித்து வருகின்றனர்.

புத்தூர் கலைமதி மக்கள் முன்றிலில், இம்மாதம் 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், எந்தவித தீர்வும் இன்றி ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. 

‘’வடக்கு மாகாண சபையே மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயாணங்களை அகற்று‘’, “மக்களின் வாழ்விடச்சூழலை பாதுகாத்து கிராமிய கட்டமைப்பை வலுப்படுத்து”, “பண்பாட்டின் பிரகாரம் சாதிய ஆதிக்கமா?”, “மனிதநேயம் செத்துவிட்டதா?” போன்ற வாசகங்களைத் தாங்கிவாறு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், பல தரப்பட்ட மயானங்கள் உள்ளபோதும் அவை தற்போதும் சாதிய பாகுபாட்டின் அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. இவ்வாறான நிலையில், கிராமங்களுக்கு மத்தியில் உள்ள சில இந்து மயானங்களை அகற்றி, அவ்விடங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என சமூக நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

குறிப்பாக பெரிய நிலப்பரப்புகளில் தொடர்ந்தும் மயானங்கள் காணப்படுவதனால், அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்ப அவ்விடங்களை ஏனைய அபிவிருத்திப் பணிக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, யாழ். மாவட்டத்தில், உரும்பிராய் செல்வபுரம், மல்லாகம் தெற்கு, திருநெல்வேலி பாற்பண்ணை, புன்னாலைக் கட்டுவன், வடக்கு திடற்புலம், உரும்பிராய் வடக்கு சரஸ்வதி, கொக்குவில் மருத்துவபீட மைதான அரங்கு, புத்தூர் கிந்துசிட்டி போன்ற மயானங்கள், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதாக, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இதனால் அப் பகுதிகளில் வாழும் மக்கள் சுவாசம் சார்ந்த நோய்களுக்கு உள்ளாகும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கவனத்தில் கொண்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .