2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தில் படை முகாம் அமைக்க இராணுவம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலய காணியில் பாரிய படைமுகாமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது.

யாழ். கொழும்புத்துறை பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள படை முகாமை அங்கிருந்து அகற்றி அக்காணியை பொதுமக்களிடம் கையளிப்பதற்காகவே மேற்படி சிங்கள மகா வித்தியாலயம் அமைக்கப்பட்டிருந்த காணியில் படை முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.

அத்துடன், கொழும்புத்துறை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 45 வீடுகள் காணப்படுவதாகவும் அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

போர் நடைபெற்ற காரணத்தால் குறித்த பாடசாலை நீண்டகாலமாக இயங்காமல் இருக்கின்றது. இந்நிலையிலேயே குறித்த பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது என்று கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த பாடசாலை அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி மாத்திரமே அரசாங்கத்துக்குச் சொந்தமானதெனவும் ஏனைய பகுதி தனியாருக்குச் சொந்தமானது என்றும் 1960ஆம் ஆண்டு கல்வித் தேவைக்கான சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் தனியாருக்குச் சொந்தமான ஏனைய பகுதியும் அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

என்ன தேவைக்காக காணி சுவீகரிக்கப்பட்டதோ அந்த தேவையைத் தவிர்ந்த வேறு தேவைக்காக காணியைப் பயன்படுத்த முடியாது என்று காணி சுவிகரிப்புச் சட்டம் தெரிவிப்பதாகவும் சட்டத்திற்கு முரணான வகையில் இராணுவத்தினர் குறித்த பாடசாலைக் காணியில் படைமுகாம் அமைப்பதற்கு வழங்குமாறு கோரியுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது யாழ். மாவட்டத்தில் ஐந்திற்கு ஒன்று என்ற வகையில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருவதாகவும் இனிவரும் காலத்தில் சிங்கள பாடசாலை ஒன்றின் தேவை ஏற்படலாம் என்றும் கல்வியியலாளர்கள் தெரிவித்தனர்.

இதற்குரிய முன்னேற்பாடாக இராணுவத்தின் 63ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று புதன்கிழமை குறித்த பாடசாலை வளாகத்தில் மரநடுகைத் திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளாதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், படைமுகாம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 17ஆம் திகதி இதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் 51ஆவது படைப்பிரிவின் தளபதி மரநடுகை நிகழ்வின் போது ஊடகவியலாளர்களிடம் உறுப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .