2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பொலிஸார் இலஞ்சம் வாங்கக்கூடாது: பூஜித

Super User   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


வட மாகாணத்திலுள்ள பொலிஸார் லஞ்சம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டுமென வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இன்று வியாழக்கிழமை (03) தெரிவித்தார்.

வடமாகாணப் பொலிஸாருக்கு 600 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு இரணைமடு இராணுவ முகாமின் நெலும் பியச மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றது.  இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

33 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 279 மோட்டார் சைக்கிள்கள் இலங்கையிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்குவதற்கென இறக்குமதி செய்யப்பட்டன.

இவற்றில் 23 மோட்டார் சைக்கிள்கள் வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவை இன்று  பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஏ-9 வீதி, ஏ-32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதி மற்றும் ஏ- 35 (பரந்தன் - முல்லைத்தீவு) வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர்.

இந்த ரோந்து நடவடிக்கை மூலம் விபத்துக்களைக் குறைத்தல், வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தல், பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாத்தல், வீதி ஒழுங்குகளைப் பேணுதல் போன்ற செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளினை பயன்படுத்துவதற்கு நால்வர் கொண்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூலம் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும். இந்த ரோந்து நடவடிக்கைகள் சம்பிராயதபூர்வமாக எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், பொலிஸார் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மீது வழக்குப் போடாமல் விடுதல், இலஞ்சம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும், பொலிஸாரினைக் கடமை செய்யவிடாது தடுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட 23 மோட்டார் சைக்கிள்களில், கிளிநொச்சி, மாங்குளம் யாழ்ப்பாணத்துக்கு 4 என்ற வீதத்திலும் முல்லைத்தீவு, காங்கேசன்துறைக்கு 2 மோட்டார் சைக்கிள்களும் வவுனியாவுக்கு 5, மன்னாருக்கு 2 என்ற வீதத்திலும் அங்குள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .