2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மொஹமட் அஷாருதினின் வாழ்நாள் தடை நீக்கம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷாருதினுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டரீதியற்றது என ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளைப் பணத்திற்காக விட்டுக் கொடுத்தமைக்காக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்த ஆயுள் தண்டனையையே ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.

3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் போட்டி நிர்ணயம் செய்தார் என மொஹமட் அஷாருதின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும், கிரிக்கெட் சம்பந்தமான பணிகளில் ஈடுபடுவதற்குமான ஆயுள் தண்டனையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்ச சபை விதித்தது,

மொஹமட் அஷாருதின், அஜய் ஷர்மா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு, அஜய் ஜடேஜா, மனோஸ் பிரபாகர் ஆகியோருக்கு நீண்டகாலத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

2000ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்தத் தடையின் பின்னர் மொஹமட் அஷாருதின் கிரிக்கெட் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதோடு, 2009ஆம் ஆண்டில் அரசியல்வாதியாக மாறினார். தற்போது அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார்.

தனது தடைக்கெதிராக அஷாருதின் ஏற்கனவே மேன்முறையீடுகளைச் செய்திருந்த போதிலும் அவை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இறுதி மேன்முறையீட்டில் அவரது தடை பொருத்தமற்றது எனவும் அவருக்கான தடையை நீக்குவதாகவும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தன் மீதான தடை நீக்கப்பட்டமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த அஷாருதின், தன் மீது தடை விதித்தமைக்காக இந்தியக் கிரிக்கெட் சபைக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எதிராகத் தான் வழக்குத் தாக்கல் செய்யப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.

இந்திய அணி சார்பாக 99 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய அவர், 45.03 என்ற சராசரியில் 22 சதங்கள், 21 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 6215 ஓட்டங்களையும், 334 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 36.92 என்ற சராசரியில் 7 சதங்கள், 58 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 9378 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .