2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

புத்தளம் நகரசபையின் செயலாளரை மாற்றுமாறு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன், ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகரசபையின் செயலாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து புத்தளம் தபால் நிலையத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (14) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.  இல்யாஸ், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான  டி.முஜாஹிதுல்லாஹ், எஸ். சலீம்கான் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நகர சபையின் செயலாளர் மீது பல்வேறு குற்றஞ்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி ஆணையாளர் இது விடயத்தில் உடனடித் தீர்வை பெற்றுத்தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.  இல்யாஸ் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி ஆகியோர் அங்கு வருகை தந்து இதற்குத் தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி வழங்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இது தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி ஆகியோர் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தாவிடம் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதற்காக மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தனர்.

'மஹிந்த வாதிகளின் கைக்கூலிச் செயலாளரை வெளியேற்று' , 'கழிவுகள், கால்வாய், குப்பைகளை அகற்றாத செயலாளரை மாற்று ' மற்றும் 'நாட்டிலே நல்லாட்சி, புத்தளம் நகர சபையில் கள்ள ஆட்சியா? ' போன்ற  வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்து வரும் ஒருவாரத்துக்குள் அறிவிப்பதாக மாவட்ட செயலாளர், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

இவ்வாறு புத்தளம் மாவட்ட செயலாளர் அளித்த வாக்குறுதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தெளிவுபடுத்தியதை அடுத்து குறித்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--