2021 மார்ச் 03, புதன்கிழமை

இந்திய இளைஞனின் மரணம் தற்கொலை என சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

கிருளப்பனை பிரபல இந்திய உணவகத்தின் சமையல்காரராக கடமையாற்றிய இந்திய பிரஜையின் மரணம், தானாக கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டதால் ஏற்பட்டதாகும் என சிலாபம் தள வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டீ.கே.விஜேவர்தன முடிவு செய்துள்ளதாக புத்தளம் நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய சேசிரி ஹேரத் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தே நீதவான் இதனைத் தெரிவித்தார்.

இந்த மரணத்திற்கு முன்னர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், ஆனால் அது மரணம் ஏற்படுமளவுக்கு பாரதூரமானதல்ல எனவும், மரணத்திற்கு முன்னர் குறித்த இளைஞர் மதுபானம் அருந்தி இருப்பதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்க அதிகாரி மற்றும் கிருலப்பனை உணவகத்தின் உரிமையாளர் ஆகியோர் இம்மாதம் 27ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

இந்திய இளைஞனான தென்னராசு செல்வராஜின் மரண விசாரணை அறிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு ஞாபகமூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளபோதும் அதன் அறிக்கை இதுவரையிலும் கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்த முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ அலவத்த, இச்சம்பவத்தின் முதலாவது சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி தொடர்பான இரசாயன பரிசோதனை அறிக்கையினை அடுத்த சில தினங்களில் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய இளைஞனின் சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதால் இறந்த இளைஞனின் உடலை இலங்கையின் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் நவமணி குமாரன் என்பவரிடம் ஒப்படைக்க சிலாபம் சட்ட வைத்திய அதிகாரிக்கு மீண்டும் உத்தரவிடுமாறும், இறந்த உடலை இந்தியாவுக்கு அனுப்ப இறந்த இளைஞனின் கடவுச் சீட்டு அவசியம் எனத் தெரிவித்துள்ளதால் அவரின் கடவுச்சீட்டை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .