2021 மே 10, திங்கட்கிழமை

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் சர்வதேச நேயர்களுக்கு

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLCast அங்குரார்ப்பணம் செய்யப்படுவதன் மூலம், இலங்கையின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பரந்துபட்ட மற்றும் அதிகரித்துச் செல்லும் சர்வதேச நேயர்கள் இப்போது இலகுவான முறையில் அணுகி பார்வையிடக் கூடியதாக இருக்கும். 

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நாடுகடந்த மற்றும் புலம்பெயர் இலங்கையர்கள் கண்டுகளிக்கக் கூடியவாறு, இலங்கையின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய சட்ட பூர்வமான ஊடக நிகழ்ச்சி உள்ளடக்கங்களை ஒரு குறிப்பிட்ட தளமேடைக்கு கொண்டு வருவதற்காக SLCast உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் HBO, SKY, FOX, TNT, Natgeo, CBS, ஹிஸ்ட்ரி மற்றும் டிஸ்னி போன்ற பெயர் குறிப்பிடத்தக்க பல அலைவரிசைகளுடன் சர்வதேச தளமேடையில் பட்டியலிடப்படவுள்ள முதலாவதும் ஒரேயொன்றுமான அலைவரிசை என்ற சாதனையை SLCast  நிகழ்த்துகின்றது. 

முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சி உள்ளடக்க சேவை வழங்குனர்கள் ஏற்கனவே SLCast உடன் இணைந்து கொண்டுள்ளதுடன், தத்தமது நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றனர். இவற்றுள்; - டயலொக் தொலைக்காட்சி, ஹாய் டீ.வி., வேர்பம் டீ.வி. (இலங்கையின் முதலாவதும் ஒரேயொன்றுமான கத்தோலிக்க அலைவரிசை), ஹெரிடேஜ் டீ.வி. (இலங்கையின் இயற்கை, நாட்டாரியல், கலாசாரம் மற்றும் உலக மக்கள், உலக மரபுரிமை ஆகியவற்றுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு அலைவரிசை), ஆர்சிக்மீடியா (பிரபலமான புஸ்வெடில்ல தொடர்கள் உட்பட), ஸ்ரீலங்கன் டீ.வி., தமது 600 இற்கும் மேற்பட்ட தலைப்புக்களுடன் டொரானா மியுசிக் பொக்ஸ், ஸ்ரட்டா பௌத்த அலைவரிசை போன்ற பல அலைவரிசைகள் உள்ளடங்குகின்றன. 

SLCast நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சஞ்சய பத்மபெரும கூறுகையில், 'பல தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் தமக்கே சொந்தமான ஒளிக்காட்சியோட்ட (Streaming) அலைவரிசைகளை தேர்ந்தெடுத்து இருக்கின்றன. இருந்தபோதிலும் குறைந்தளவான வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளுடன் இணைந்ததாக அதனை தொழிற்படுத்துவதற்கு ஏற்படுகின்ற உயர்ந்தளவான செலவின் விளைவாக, இந்த அலைவரிசைகள் தமது நிகழ்ச்சிகளை குறைந்த தராதர மாதிரியில் ஒளிக்காட்சியோட்டம் செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. மறுபுறத்தில் SLCast ஆனது, முழு அளவில் உயர் ஒளித்தெளிவு (HD) தராதரத்தைக் கொண்ட ஒளிக்காட்சியோட்டத்தை (Stream) உறுதிப்படுத்துகின்றது. தனது அடிப்படை தொழிற்பாட்டுக்காக இத்துறையில் மிகச் சிறந்த தரப்பினருடன் பங்காளியாக ஒன்றிணைந்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற அடுத்த தலைமுறை தொலைக்காட்சி ஒளிக்காட்சியோட்ட தராதரங்களை பயன்படுத்துவதன் ஊடாக மேற்படி உயர் ஒளித்தெளிவை SLCast வழங்குகின்றது. அந்த தரப்பினர் யாரெனில் - Fox, CBS, வோர்னர் டீவி போன்ற முன்னணி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களுடன் பங்காளியாக கைகோர்த்திருக்கும் சேவை வழங்குனர்களாகும்;. இதன்படி, உலகெங்கும் தங்குதடையற்ற விதத்தில் ஒளிக்காட்சியோட்ட சேவை (Streaming Service) கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது' என்றார்.  

SLCast ஆனது, தனது ஒளிக்காட்சியோட்ட சேவையை அனைத்து பிரபல தளமேடைகளிலும் வழங்குகின்றது. அவற்றுள் - ரொகு டீ.வி, சம்சுங் ஸ்மார்ட் ஹப், அப்பிள் ios, அன்ட்ரொயிட், அன்ட்ரொயிட் ஸ்மார்ட் ஹப் ஆகியவை உள்ளடங்கும் அதேவேளை இணையத்தள ஒளிக்காட்சியோட்டத்திலும் கிடைக்கின்றது. உங்கள் வீடுகளில் சௌகரியமாக இருந்தவாறே, உங்களுக்கு விருப்பமான அலைவரிசைகளை, அதே உயர் ஒளித்தெளிவுடன் (HD) கண்டுகளிப்பதற்கான வசதியை SLCast வழங்குகின்றது. 

ஒரு கணினிக்கு அல்லது ஏனைய சாதனம் ஒன்றுக்கு ஏதேனும் ஒரு உள்ளடக்க விடயங்களை தரவிறக்கம் செய்வதற்கு SLCast ஆதரவளிக்க மாட்டாது. இது ஒரு 100% ஒளிக்காட்சியோட்ட (Streaming) சேவையாகும். எனவே அதில் உள்ளடங்கியுள்ள எந்தவொரு விடயத்தையும் நேரடியாக பிரதி பண்ணிக் கொள்ள முடியாது. புவியியல்-தடை (Geo Blocking) வசதியையும் SLCast வழங்குகின்றது. உதாரணமாக, குறிப்பிட்ட ஏதேனும் சந்தை அல்லது நாடு ஒரு அலைவரிசையை அணுகிப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமாயின், அந்த நாட்டுக்கான அலைவரிசையை புவியியல்-தடை செய்வதற்கான தொழில்நுட்பத்தை SLCast தன்வசம் கொண்டுள்ளது. 

நாடக அரங்குகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக, பிரபலமான 'அரங்க நாடகங்கள்' அரங்கேற்றப்படும் சமகாலத்திலேயே அவற்றை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சமுதாயத்தினருக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யும் சேவையை SLCast விரைவில் அறிமுகம் செய்யும். அதேவேளை 'தனிப்பட்ட அலைவரிசை' (Private Channel) என்ற சிறப்பம்சத்தையும் SLCast அறிமுகப்படுத்த இருக்கின்றது. தம்முடைய தனிப்பட்ட நிகழ்வுகளை (திருமணங்கள், பிறந்ததினங்கள், தேனீர் விருந்துபசாரங்கள் போன்றவற்றை) வெளிநாடுகளில் உள்ள தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்க்கக்கூடியவாறு, தனிப்பட்ட முறையில் ஒளிக்காட்சியோட்டமாக ஒளிபரப்புச் செய்ய விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கு வசதியளிக்கின்றது. 

SLCast இற்குள் உள்நுழைவது மிகவும் இலகுவானது. www.slcast.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து sign up செய்ய வேண்டும். இந்த சேவைக்கு ஒத்திசைவாக செயற்படும் ரொகு டீ.வி., ios, அன்ட்ரொயிட் அல்லது ஸ்மார்ட் டீ.வி. ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு தளமேடையில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் உட்பதிவு (Log in) செய்து கொண்டிருக்கும் உள்ளடக்க நிகழ்ச்சியை அவர் கண்டுகளிக்க முடியும். SLCast ரொகு பிரயோக மென்பொருளை SLCast இணையத்தளத்தில் இருந்து வாடிக்கையாளரின் ரொகு பிளேயருக்கு தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ios மற்றும் அன்ட்ரொயிட் பிரயோக மென்பொருட்களை அப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் போன்றவற்றில் இருந்து தரவிறக்கம் செய்யலாம். SLCast ஆனது சம்சுங் ஹப் இலும் (டைசன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளுக்காக) கிடைக்கக் கூடியதாக உள்ளது. அதேநேரம், அன்ட்ரொயிட் தொலைக்காட்சிகளுக்காக அன்ட்ரொயிட் பிளே ஸ்டோரில் இருந்து பெற முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X