2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பங்குச்சந்தை முதலீடுகளுக்கான அறிமுகம்-2

A.P.Mathan   / 2011 ஜூன் 13 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

மூலதனச் சந்தை - Capital Market

நீண்டகால நிதி வழங்குனர்களையும், நிதி பெறுநர்களையும் கொண்டமைந்த சந்தை மூலதனச் சந்தை ஆகும். பொதுவாக மூலதனச் சந்தையில் கொடுக்கல் வாங்கல்கள் செய்யக்கூடிய பிணைகளாக பின்வருவன அமைகின்றன.

  • பங்குகள்- கம்பனிகளின் உரிமைத்துவத்தினை குறிக்கின்றது.
  • நம்பிக்கை அலகுகள் - நிரற்படுத்தப்பட்ட முதலீடுகளைக் குறிக்கின்றது
  • தொகுதிக் கடன்கள் - கம்பனிகளின் கடன் பிணைப் பத்திரம்
  • திறைசேரி உண்டியல், முறிகள் - அரசாங்க கடன் பிணைப் பத்திரங்கள்

மூலதனச் சந்தை முதலீட்டின் நன்மைகள்  - Benefits of Capital Market

மூலதனச் சந்தையில் முதலீடானது 'உயர் ஆபத்து - உயர் வருமானம்'; எனும் கருத்தினை உணர்த்துகின்றது. இங்கு துறைசார் வல்லுநர்களின் (பங்குத்தரகர்கள்) அறிவுரைகளைப் பின்பற்றி திறமை அடிப்படையில் ஆபத்துக்களை பரப்புவதன் ஊடாக இவற்றிலிருந்தான முதலீட்டு வருமானத்தினை பின்வரும் வழிகளில் உச்சப்படுத்திக் கொள்ள முடியும். பொதுவாக மூலதனச் சந்தை முதலீடுகளிருந்து பின்வரும் பிரதிபலன்களை எதிர்பார்த்து முதலீடு முயற்சிகளில் ஈடுபடுகின்றோம்.

1) மூலதனலாபம் - Capital Gain

பங்கினைக் கொள்வனவு செய்யும் போது கொடுக்கப்படும் விலை பங்கின் கொள்விலை எனவும், அதனை விற்பனை செய்யும் போது வழங்கப்படும் விலை பங்கின் விற்பனை விலை எனவும் குறிப்பிடப்படும். இங்கு கொள்விலையினை விட விற்பனை விலை அதிகமாகக் காணப்படும் போது அது மூலதனலாபம் எனவும். மாறாக கொள்விலையினை விட விற்பனை விலை குறைவாகக் காணப்படும் போது அது மூலதன நட்டம் எனவும் கூறப்படும். இவ்வருமானத்திற்கு வருமானவரி விலக்கு உண்டு. மூலதனலாபம் ஸ்ரீ பங்கின் விற்பனை விலை – பங்கின் கொள்விலை

2) பங்கிலாபம் - Dividend

கம்பனியினால் உழைக்கப்படுகின்ற இலாபம் உரிமைத்துவத்திற்கு ஏற்ப பங்குதாரர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றது. உரிமைத்துவத்திற்கு ஏற்ப பகிரப்படும் இலாபம் பிரத்தியேகமாக பங்கிலாபம் (Dividend) எனப்படும். இப் பங்குலாபமானது பணமாக அல்லது வேறு சொத்து வடிவில் வழங்கப்படலாம்.

3) ஒதுக்கங்ளை முதலாக்கம் செய்தல் - Capitalization of Reserve

போதுமான அளவு இலாப ஒதுக்கங்களைக் (Reserves) கொண்ட கம்பனிகள் இலாப ஒதுக்கத்தின் பகுதியளவை முதலாக்கல் செய்கின்றன. இதன்போது ஏற்கனவேயுள்ள பங்குதாரர்களுக்கு அவர்கள் கொண்டுள்ள உரிமைத்துவத்திற்கு ஏற்ப மேலதிக உரிமைத்துவம் (பங்குகள்) இலவசமாக ஒதுக்கப்படுகின்றன. இது முன்பு உபகாரப்பங்கு வழங்கல் (Bonus Issue) என அழைக்கப்பட்டது.

4) உரிமைப் பங்கு வழங்கல் - Rights Issue

பட்டியல்படுத்தப்பட்ட கம்பனிகள் மேலதிக மூலதனத்தைத் திரட்டிக்கொள்ளும் நோக்குடன் ஏற்கனவேயுள்ள பங்குதாரருக்கு அவர்கள் கொண்டுள்ள பங்குவிகிதாசாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட விலையில் பங்குகளை ஒதுக்கி வழங்குகின்ற செயலொழுங்கு உரிமைப்பங்கு வழங்கல் எனப்படும். இங்கு விலையானது பொதுவாக பங்கின் சந்தை விலையினைவிடக் குறைவாகக் காணப்படும்.

5) பங்குப்பகிர்வு - Share Splits

கம்பனிகளின் மூலதனக்கட்டமைப்பில் (Stated Capital) எதுவித மாற்றத்தினையும் ஏற்படுத்தாது பங்குகளின் எண்ணிக்கையினை குறித்த விகிதத்தினால் அதிகரித்தல் பங்குப்பகிர்வு எனப்படும். பங்குப்பகிர்வு, முதலட்டாளர்கள் என்றரீதியில் சிறிய முதலீட்டாளர்களும் மிக உயர்ந்த சந்தை விலையினைக் கொண்ட கம்பனிகளின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தை எற்படுத்துவதுடன், பங்குகளின் திரவத்தன்மையும் அதிகரிக்கின்றன.

இதற்கு மேலாக பொதுவாக சில நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

திரவத்தன்மை - Liquidity

மூலதனச் சந்தைப் பிணையங்கள் அதாவது பங்குகளைக் கொண்டுள்ளவர்கள் எந்நேரத்திலும் அவற்றை முழுமையாக அல்லது பகுதியளவினை விற்பனை செய்வதன் மூலம் பணமாக மாற்றிக் கொள்ளக் கூடியதன்மை. ஆதாவது காலதாமதம் மற்றும் முதல் இழப்பு இன்றி பணமாக மாற்றிக் கொள்ள கூடிய விஷேட சிறப்பியல்பு.

கட்டுப்பாடுகள் அற்ற முதலீட்டு - முயற்சி  Free Investment

முதலீட்டாளர்கள் மிகக்குறைந்த ஆரம்பத் தொகையுடன் பங்குகளில் முதலீடு செய்யமுடிதல். அதாவது ஒரே தடவையில் 1 பங்கு முதல் 1 மில்லியன் வரையான பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியும். அதேபோல் வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவினர்களுடன் இணைந்தும் பங்குச் சந்தையில் முதலிடமுடியும். இவ்வாறாக முதலீடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்தவாறு முகாமை செய்வதுடன் விசேட வரிச்சலுகைகளையும் பெறமுடியும்.

குறித்த நாள் வியாபாரம் - Day Trading

முதலீட்டாளர் குறித்த பங்குத்தரகர் ஊடாக ஒரு நாளிற்குள் குறித்த பங்குகளை கொள்வனவு செய்து விற்பனை செய்திருந்தால் அல்லது விற்பனை செய்து கொள்வனவு செய்திருந்தால் கூடுதலான பரிமாற்றல் பொறுமதிக்கு மட்டும் தரகுக் கட்டணம் அறவிடப்படும். இங்கு பரிமாற்றம் குறித்த நாளில் (9.30 - 2.30) நிறைவேறியிருத்தல் வேண்டும்.

பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு வசதி - Diversification

முதலுக்கான நட்ட அச்சத்தினை இழிவுபடுத்தத்தக்க வகையில் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுச் செயல்முறைமையூடாக ஆபத்துக்களைப் பரவலாக்க முடிதல். அதாவது ஒரு துறைமட்டுமல்லாது பல்வேறுபட்ட துறைகளில் முதலீடு செய்து ஆபத்துக்களைப் பரப்புதல். விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திலிருந்தவாறு சுதந்திரமாக இணையத்தளமூடாக பட்டியல்படுத்தப்பட்ட முதலீடுகள் தொடர்பான முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொண்டு முகாமை செய்யவும் முதலீடுசெய்யவும் வசதியளிக்கின்றது. குறித்த வியாபார நாளுக்குள் காலம் தாழ்த்தப்பட்ட கட்டளையிடும் வசதி மூலமாக நாம் விரும்பிய விலையில் பங்குகளை கட்டளையிட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக நோக்குமிடத்து கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது முதலீட்டாளர் தொடர்பில் காலத்திற்குக் காலம் தேவைகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட வசதிகளை வழங்குகின்றது.

தொகுப்பு: மு.திலீபன்
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X