2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஹேமாசின் முதலாவது மாதிரி முன்பள்ளி யாழ்ப்பாணத்தில்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஹேமாஸ் பியவர மாதிரி முன்பள்ளியை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததன் மூலம், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின் சிறுவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் வழங்கியுள்ளது.

நல்லூர் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள இந்த ரூ. 8 மில்லியன் பெறுமதியான பியவர முன்பள்ளியானது, ஹேமாஸ் ஹோல்டிங்சின் நிதியுதவியுடன் UNOPSஇனால் முன்னெடுக்கப்படுவதுடன், 33ஆவது ஹேமாஸ் பியவர முன்பள்ளியாகவும் உள்ளது.

ஹேமாசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் இதுவாகும். கடந்த பெப்ரவரி 2009இல் இடம் பெயர்ந்தோருக்கான குறுகியகால நிவாரணமாக, வவுனியாவிலுள்ள மெனிக் ஃபார்ம் நிவாரண முகாம்களில் பல முன்பள்ளிகளையும் விளையாட்டு இடங்களையும் ஹேமாஸ் அமைத்தது. இது பல ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு முன்பள்ளி கல்வியை வழங்கியது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல மாவட்டங்களிலும் மாதிரி முன்பள்ளியை அமைப்பதே அதன் இரண்டவது கட்டமாகும்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மேயர் திருமதி யோகா பற்குணராஜா மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் ஹேமாசின் உத்தியோகத்தர்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

ஹேமாசின் சமூக முதலீடானது, சிறுவர் அபிவிருத்திக்கான அமைச்சின் சிறுவர்களுக்கான செயலகத்துடன் இணைந்து ECCDஇல் (ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி) நோக்கமாக உள்ளது. இலங்கை சிறுவர்களின் நலனில் இந்த திட்டமானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை முழுவதும் 33 நிலையங்களில் ஏறத்தாழ 3000 சிறுவர்கள் கல்வியைப் பெறுகின்றனர். 2002 தொடக்கம் நிறுவனம் ஏறத்தாழ ரூ. 200 மில்லியனை இத்திட்டத்தில் முதலிட்டுள்ளதுடன், அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஹேமாஸ் அவுட்ரீச் ஃபவுன்டேஷனின் மூலம் இது முன்னெடுக்கப்படுகின்றது. ஹேமாஸ் பணிப்பாளர் சபை மற்றும் இலங்கையின் பிரபல்யமானவர்களைக் கொண்ட குழுவினால் இது முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, 'பல நிறுவனங்களுக்கு ஹேமாஸ் ஒரு முன்மாதிரியாக உள்ளது. தேசிய தேவையை கருத்தில் கொண்டுள்ள ஒரு மாதிரியாக 'பியவர' உள்ளது.

மிகவும் அமைதியான முறையில் ஹேமாஸ் எமது எதிர்கால சந்ததியினருக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவளித்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். பொறுப்புணர்வுமிக்க நிறுவன பிரஜையாக திகழ்வதுடன், எமது நாட்டின் அபிவிருத்திக்கான பங்காளியாகவும் திகழ்வதையிட்டு ஹேமாசுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மேயர் திருமதி யோகா பற்குணராஜா, 'யாழ்ப்பாண மக்கள் இதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். ஒரு ஆசிரியர் என்ற வகையில், அதன் பெறுமதியை நான் காண்கின்றேன். இந்த வயது சிறுவர்களுக்கு அது சரியான தளத்தை வழங்குவதுடன், அது நாட்டுக்கும் நன்மை பயக்கும்' எனத் தெரிவித்தார்.

ஹேமாஸ் பணிப்பாளர் அப்பாஸ் யூசுபலி தெரிவிக்கையில், 'பொறுப்புணர்வுமிக்க நிறுவன பிரஜை என்ற வகையில், வடக்கிலுள்ள மக்கள் தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கவும் ஒரே தேசமாக செழிப்புறுவதற்கான ஒரு தேசிய முயற்சியில் ஒன்றிணைந்து செயற்படுவதையிட்டு ஹேமாஸ் மகிழ்சியடைகிறது. இது ஒரு நிலையான திட்டமானதினால், யாழ்ப்பாணத்திலுள்ள சிறுவர்களின் வாழ்க்கையை பியவர மாற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

ஹேமாஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் ஷரோமி மாசகோரள, 'யாழ்ப்பாணத்துக்கான எமது முதல் விஜயம் 2002இல் இடம்பெற்றது. ஒரு இருட்டான கராஜில் பல சிறுவர்கள் அடைக்கப்பட்டு, அது முன்பள்ளி என அழைக்கப்பட்டது. ஒரு வருடத்தின் பின்னர், சிறுவர் செயலகம் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையுடன் இணைந்து எமது முதலாவது முன்பள்ளியை நல்லூர் மாநகர சபைக் கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்தோம்.

அச்சமயத்தில் காணப்பட்ட சூழ்நிலைகளுக்கு அமைய ஒரு மாதிரி பாடசாலையை எம்மால் உருவாக்கக் முடியாமல் இருந்தது. 2002 தொடக்கம் முன்பள்ளி ஆசிரியர்களை நாம் இங்கு பயிற்றுவித்து வருகிறோம். புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி பாடசாலைகளை நடத்தவும், இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய ஆசிரியர்களை பயிற்றுவிக்கவும் அவர்கள் திறமை பெற்றுள்ளனர்' எனத் தெரிவித்தார்.

'கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் மேலும் நான்கு மாதிரி பாடசாலைகளை உருவாக்குவதே எமது இலக்காகும். சர்வதேச நிறுவனங்கள் மற்றும் எமது பங்காளிகள் மூலம் அதற்கான நிதியை திரட்ட நாம் திட்டமிட்டுள்ளோம்' என மாசகோரள மேலும் தெரிவித்தார்.

'பியவர' திட்டமானது, ஆசிய பிராந்தியத்துக்கான மாதிரியாக, 2007இல் ஆசிய CSR விருதை பெற்றுக்கொண்டது. சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகத்துடனான அதன் தந்திரோபாய பங்காளித்துவமானது, இத்திட்டத்தின் நிலையான தன்மை மற்றும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

ஆசிரியர் பயிற்சி, பெற்றோர் விழிப்புணர்வு போன்ற பலதரப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுள், ஹேமாசின் பிரதான குறியீடான 'பேபி ந்ஷரமி'இன் அனுசரணையில் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் வாரந்த நிகழ்ச்சியான 'தரு பெடியாகே லோகய' (குழந்தையின் உலகம்) உள்ளது.

நுகர்வோர் உற்பத்திகள், ஆரோக்கியம், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் சக்தி உருவாக்கம் ஆகிய ஐந்து பிரதான பிரிவுகளைக் கொண்ட, இலங்கையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஹேமாஸ் குழுமம் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--