2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தொழில்சார் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவன தலைவர் கொழும்பு வருகை

A.P.Mathan   / 2011 நவம்பர் 24 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி நிறுவனத்தின் இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் தலைவரான மக்ரந்; நேனே - தொழில்சார் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது இவர், பெற்றோலிய வள கைத்தொழில்கள் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, பெற்றோலிய வள கைத்தொழில்கள் அமைச்சின் செயலாளர் திருமதி சந்தியா விஜேபண்டார மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ஆகியோரை சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சர் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. தலைவர் ஆகியோரினால் கலந்துரையாடப்பட்ட பரந்துபட்ட வகையிலான விடயங்களுள் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இலங்கையில் முன்னெடுக்கவுள்ள சந்தைப்படுத்தல் வலையமைப்புத் திட்டம், சீனன் குடாவில் நிறுவனம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முதலீடு, உலக சந்தையில் எண்ணெய் விலைகளின் தளம்பல் காரணமாக இலங்கையில் பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் தாக்கங்கள் போன்றனவும் உள்ளடங்கியிருந்தன.

மும்பையை தளமாகக் கொண்டியங்கியவாறு இலங்கையில் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் செயற்பாடுகளையும் கண்காணித்து வருபவரான நேனே, கடந்த மாதம் (ஒக்டோபர் 2011) லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கொழும்புக்கு மேற்கொண்ட முதலாவது விஜயமாக இது அமைந்தது.

ஒரு விநியோக வலையமைப்பு நிபுணரான நேனே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலப்பகுதிக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் உபாய நடவடிக்கைகள் பிரிவிற்கு தலைமைதாங்கி செயற்பட்டார். அத்துடன் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் உபாய ரீதியிலான பெறுமதி வலையமைப்பில் 'போக்குவரத்து ஒழுங்குமுறைப்படுத்துனர்', 'தினசரி செயற்பாட்டு முகாமைத்துவ முறைமைகள்' போன்ற பலவற்றினை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தலையீடுகளை அவர் வெற்றிகரமாக பயன்படுத்தினார். தனித்து செயற்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை வெற்றிகரமாக பூரணப்படுத்துதல் உள்ளடங்கலாக, பல்வேறு சந்தைப்படுத்தல் முன்மாதிரி திட்டங்களை திட்டமிடுவதிலும் அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதிலும் இவர் மிகவும் பரிச்சயமுள்ளவராவார்.

சந்தைப்படுத்தல் துறையின் அனைத்து உட்பிரிவு நடவடிக்கைகளிலும் இவர் பரந்துபட்ட அடிப்படையிலான அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளார். LPG இல் (செயற்பாடுகள் மற்றும் விற்பனை), பொதுவான செயற்பாடுகள், வழங்கல் மற்றும் விநியோகம் ஆகிய பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளதுடன் உபாய நடவடிக்கைகள், கப்பல் சேவை மற்றும் வணிக செயற்பாடுகள் ஆகிய பிரிவுகளுக்கு தலைமை வகித்து செயற்படுகின்றார்.

பெற்றோலியம் தொழிற்துறையின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கும் வகையில் 33 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை நேனே கொண்டுள்ளார். குர்காவன் நகரில் உள்ள முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவகம் மற்றும் வரையறுக்கப்பட்ட இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட உயர்தரமான முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் அவர் பெற்றுக்கொண்ட பயிற்சியானது, கம்பனியின் இலக்குகளை அடையும் விடயத்தில் அவருக்குள்ள நிபுணத்துவ ஆற்றலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளது.

புகைப்பட விளக்கம்: லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி நிறுவனத்தின் இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் தலைவரான மக்ரந்; நேனே, பெற்றோலிய வள கைத்தொழில்கள் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும், லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.ஆர்.சுரேஷ் குமார் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .