2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

நவீன முறையில் பாரிய பேருந்து தரிப்பிட நிலையம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பகுதியில் நவீன வசதிகளுடன் அமைந்த பேருந்து தரிப்பிட நிலையத்தை அமைப்பதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் பூர்த்தியடைகையில் மொத்த செலவீனமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கொழும்பு பேருந்து தரிப்பிட முறை சிக்கல்கள் நிறைந்ததாக காணப்படுவதாகவும், பிரதான பேருந்து நிலையமும், புகையிரத நிலையமும் ஓரிடத்தில் இல்லாமல் இரு வேறு இடங்களில் காணப்படுவதால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாகவும், சர்வதேச தரங்களுக்கு அமைய அமைந்த பேருந்து, புகையிரதம் மற்றும் மொனோரயில் நிலையங்களை ஒரே கட்டிடத்தில் அமையும் வகையில் நான்கு மாடிக்கட்டிடமாக இந்த புதிய நவீன பேருந்து நிலையம் கொழும்பில் அமையவுள்ளது.

தற்போது நாளாந்தம் சுமார் 300,000 பேருந்து மற்றும் புகையிரத பயணிகள், கொழும்பு புறக்கோட்டையை வந்தடைவதாகவும் இதில் சுமார் 210,000 பேருந்தையும், 90,000 பேர் வரை புகையிரதத்தையும் பயன்படுத்துகின்றனர் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய திட்டம் பூர்த்தியடையும் பட்சத்தில் பயணிகளுக்கு பெரும் சௌகரியம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் எனவும், போக்குவரத்து துறையும் இலாபமீட்டும் வகையில் அமையுமெனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .