2021 ஜனவரி 16, சனிக்கிழமை

செலான் வங்கி தொடர்ந்தும் ரூபா 3 பில்லியனுக்கும் அதிகமான வரிக்கு முன்னரான இலாபம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது, 2012 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் பெறுமதிசேர் வரி (வற்) மற்றும் வருமான வரி ஆகியவற்றுக்கு முன்னரான இலாபமாக ரூபா 3,130 மில்லியனைப் பெற்றுக் கொண்டதன் மூலம், 3ஆம் காலாண்டில் மனதில் பதியத்தக்க நிதிப்பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 120 சதவீத வளர்ச்சியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011 செப்டெம்பரில் முடிவடைந்த 9 மாதங்களுக்கான பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரி ஆகியவற்றுக்கு முன்னரான (அசாதாரணமாக ஏற்பட்ட தன்னார்வ ஓய்வு பெறல் திட்டத்திற்கான செலவுக்கு முந்திய) இலாபமானது ரூபா 1,424 மில்லியனாக காணப்பட்டது. கடந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் ரூபா 303 மில்லியனாக பதிவுசெய்யப்பட்ட வரிக்குப் பின்னரான இலாபமானது இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் ரூபா 1,604 மில்லியனாக அதிகரித்துள்ளது.

'கடன் விரிவாக்கல்' தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், செலான் வங்கியின் மைய வங்கியியல் தொழிற்பாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, வங்கியின் உறுதிமிக்க செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட்டன. 2012 மூன்றாம் காலாண்டில் தேறிய வரி வருமானம் 12 வீதத்தினால் ரூபா 6,418 மில்லியனாக அதிகரித்தது. தரம்சார் முற்பணங்கள் (Quality Advances) மற்றும் கடன் எல்லைகள் மீதான செயற்றிறன் மிக்க முகாமைத்துவம் ஆகியவற்றின் பெறுபேறாகவே இந்த அதிகரிப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சவால்மிக்க சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும் தனது தேறிய வரி எல்லையை 4.95 சதவீதமாக பேணிக் கொள்வதற்கு செலான் வங்கியினால் முடியுமாக அமைந்த அதேநேரம், 2011 டிசெம்பரில் பதிவு செய்யப்பட்;ட 4.91 சதவீதத்தை விடவும் சிறியதொரு முன்னேற்றமாகவும் இது காணப்படுகின்றது.

ரூபா 1,698 மில்லியனாக காணப்பட்ட வரியல்லா வருமானமானது 2012ஆம் ஆண்டின் முதல் 9 மாத காலப்பகுதியில் ரூபா 1,816 மில்லியனாக அதிகரித்தது. இறக்குமதி சார்ந்த செயற்பாடுகளில் ஏற்பட்டு, பின்னர் வர்த்தக நிதி மற்றும் காசு முகாமைத்துவ சேவைகள் போன்ற ஏனைய பிரிவுகள் முழுவதும் பரவிய பொதுவான வீழ்ச்சி நிலைமைகளுக்கு மத்தியிலேயே இந்த நிதிப் பெறுபேறு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 9 மாத காலப்பகுதியில், தனது மேந்தலைச் செலவுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தும் போக்கினை தொடர்ந்தும் கடைப்பிடித்துள்ளது. செலவுத் திறன்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், 'செலவுக்கான - வருமான வீதத்தை' 67 சதவீதமாக உயர்த்திக் கொண்டதன் மூலம் பிரதிபலனைப் பெற்றுத்தந்துள்ளன. இது, 2011 டிசெம்பரில் பதிவுசெய்யப்பட்டதை விடவும் 6 வீதம் குறைவானதாகும்.

கடுமையான போட்டி மற்றும் அதிகரித்துச் செல்லும் வட்டிவீத சூழலுக்கு மத்தியிலும் செலான் வங்கியானது, தனது வைப்புத் தளத்தை ரூபா 13.8 பில்லியன் அதாவது 15 வீதத்தினால் (வருடாந்த அடிப்படையில்) அதிகரித்துள்ள அதேநேரம், முற்பணத் தொடரை ரூபா 12.7 பில்லியன் அதாவது 14 வீதத்தினால் (வருடாந்த அடிப்படையில்) அதிகரித்துக் கொண்டுள்ளது. அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டதும் ஸ்திரமானதுமான மீள்-சேகரிப்பு முயற்சிகளின் ஊடாக, 2011 இல் 14.24 சதவீதமாக காணப்பட்ட தனது செயற்படா சொத்து வீதத்தை (IIS இனது தேறிய பெறுமதி) 2012இன் மூன்றாம் காலாண்டு இறுதியில் 12.99 சதவீதமாக செலான் வங்கி குறைத்துக் கொண்டுள்ளது. வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன தகவல் வெளியிடுகையில், 'தரம்சார் சொத்துக்களை (Quality Assets) உள்ளீர்த்தல், பிரச்சினைக்குரிய கடன்களை மறுசீரமைத்தல் மற்றும் செயற்றிறனுள்ள மீள்-சேகரிப்பு உபாயங்கள் என்பவற்றின் ஊடாக 2013ஆம் ஆண்டு இறுதியில் இவ்வீதத்தை ஒற்றை இலக்க மட்டத்திற்கு குறைப்பது தொடர்பில் வங்கி அதிக கவனம் செலுத்தி செயற்படுகின்றது' என்று தெரிவித்தார்.

செலான் வங்கி 2012ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களிலும் 8 புதிய கிளைகள் மற்றும் சௌகரிய சேவை நிலையங்களை திறந்துள்ளதுடன், 3 கிளைகளை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமான அமைவிடங்களுக்கு இடம் நகர்த்தியுள்ளது. 2012 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை, வங்கியின் கிளை வலையமைப்பானது 139 கிளைகள்/ சௌகரிய சேவை நிலையங்களையும் 145 ATM மையங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. 2013 இன் முதலாம் காலாண்டின் போது தனது கிளைகளின் எண்ணிக்கையை 150ஆக அதிகரிக்க செலான் வங்கி உத்தேசித்துள்ளது.

எதிர்கால வளர்ச்சிக்கு தயாராகும் பொருட்டு, 2012 நவம்பர் மாதத்தில் 'தனித்தரப்பு ஒதுக்கம்' (Private Placement) ஒன்றின் ஊடாக தொகுதிக் கடன் வழங்கலை மேற்கொள்ள வங்கி திட்டமிட்டுள்ளது. அத்துடன் செலான் வங்கியின் எதிர்கால வளர்ச்சிக்கான உபாய திட்டங்களின் அடிப்படையிலமைந்த முக்கிய பிரிவுகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வங்கி உத்தேசித்துள்ளது. புதிய உற்பத்தி அபிவிருத்தி, கிளை விஸ்தரிப்பு, சேவைத் தர மேம்படுத்தல், ஊழியர் பயிற்சியளிப்பு மற்றும் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு போன்ற பிரிவுகளும் அவற்றுள் அடங்குகின்றன.


செலான் வங்கியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'கடந்த வருடத்தின் பிற்பகுதியில் நாம் உருவாக்கிய உபாய ரீதியிலான திட்டத்தை செய்து முடிப்பதில் நாம் கூடிய கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றோம். எமது இலக்குகளை அடைவதற்கான பாதையில் நாம் சிறப்பாக பயணிக்கின்றோம் என்பதற்கு இவ்வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட பெறுபேறுகள் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட எதிர்கால வளர்ச்சியின் பொருட்டு, எமது மூலதன மற்றும் ஆளுகைக் கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம்' என்று கூறினார்.

9 மாத காலப்பகுதியில் உறுதிமிக்க நிதிப் பெறுபேறுகளை பெற்றுள்ளதன் விளைபயனாக பங்கொன்றின் மீதான உழைப்பு ரூபா 6.33 ஆக (வருடாந்த அடிப்படையில்) அமைந்திருந்தது.   அதேவேளை, சொத்துக்கள் மீதான வருமானம் (வரிக்கு முன்னரான இலாபம்) மற்றும் பங்குகள் மீதான வருமானம் ஆகியவை முறையே 1.93 சதவீத மற்றும் 11.87 சதவீதமாக காணப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .