2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில், இவ்வாறு வளர்ச்சியடையும் வணிகத்ைத நம்பியிருக்கும் வணிகர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சீனாவின் மிகப்பெரும் வணிக நிறுவனமான அலிபாபா, நெருக்கடிக்குள் தள்ளவோ அல்லது அவர்கள் வணிகத்​ைத மெல்ல மெல்ல ஏப்பமிட்டு, இலங்கையின் இணையவழி வர்த்தகம் மூலமாக, அந்த வர்த்தகர்களை ஏப்பமிட்டுக் கொள்ளவோ இருக்கிறது என்பது, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு கசப்பான செய்தியே! 

அலிபாபா நிறுவனமானது, சீனாவில் 1999ஆம் ஆண்டில் ஜாக் மா (Jack Ma)அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், சீனாவிலுள்ள வாடிக்கையாளர்களையும் - வணிகர்களையும், அதுபோல வணிகர்களையும் - வணிகர்களையும் ஒன்றிணைக்கும் இணையத்தளமாக, அலிபாபா செயற்படத் தொடங்கியிருந்தது. ஆனால், குறித்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும், அலிபாபாவின் வணிகத்​ைத எல்லைகளைக் கடந்து விரிவாக்கம் செய்ததுடன், அலிபாபா எனும் குழும நிறுவனத்தை ஆரம்பித்து, வெவ்வேறு வணிகங்களிலும் கால்பரப்ப, ஜாக் மாவுக்கு உதவி செய்தது என்பது மிகையல்ல. இன்றைய நிலையில், அலிபாபா குழுமத்தின் பெறுமதி, 542 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதுபோல, அலிபாபா இணையத்தளம், சீனாவிலுள்ள உற்பத்தியாளர்களை உலகின் மூலைமுடுக்கெடுக்கலாம் கொண்டுசேர்க்கும் இணையத்தளமாக மாறியிருக்கிறது.  

குறிப்பாக, இலங்கைக்கு வருகின்ற 80%க்கும் அதிகமான சீன தயாரிப்புக்கள் அனைத்துமே, அலிபாபா இணையத்தளம் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் வாயிலாக விரிவாக்கம் பெற்ற வணிகங்கள் ஆகும். இலத்திரனியல் உபகரணங்கள் முதல்கொண்டு, பெருவாரியான தயாரிப்புக்கள் அனைத்துமே, சீனாவிலிருந்து வருகின்ற நிலையில், இடைத்தரகர்களை நீக்கி, அலிபாபா நிறுவனமே இலங்கைக்கு நேரடியாக உற்பத்திகளையும், தயாரிப்புக்களையும் கொண்டுவருமாயின், நமது வணிகர்களின் நிலை என்னவாகும் எனச் சிந்தித்து பாருங்கள். 

இலங்கையின் முன்னணி இணையவழி நிறுவனமான Daraz (https://www.daraz.lk/) நிறுவனத்தின் தாய்நிறுவனத்​தைதத் தனது அலிபாபா குழுமத்தின் வாயிலாகக் கொள்வனவு செய்ததன் மூலமாக, அலிபாபா இணையச் சந்தை நிறுவனமானது, இலங்கைக்குள் கால் பதித்துள்ளது. இன்றைய நிலையில், Daraz தெற்காசிய இணையச் சந்தையில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட பல்வேறு நாடுகளில், தனது வணிகத் தளத்​தைக் கொண்டுள்ளது. எனவே, அலிபாபா நிறுவனம் குறித்த நிறுவனத்​தைக் கொள்வனவுச் செய்தமை, அலிபாபாவை மிக இலகுவாக அனைத்து நாடுகளுக்கும் கொண்டுச் சேர்க்க இலகுவாக உதவி புரியும். இதன்மூலமாக, அலிபாபா நிறுவனம், அனைத்து நாடுகளுக்குள்ளும் தனது வணிக பரப்​பை மெல்ல மெல்லமாகப் பரப்புவதுடன், தனியுரிமைச் சந்தை நிலையை உருவாக்கவும் இது வழிவகுக்க போகிறது என்பதுதான் ஆபத்தான உண்மை ஆகும். 

இலங்கையில் தற்போது Daraz நிறுவனத்​தைக் கொள்வனவு செய்ததன் மூலமாக, நிர்வாக உரிமையாளராக அலிபாபா நிறுவனம் இலங்கைக்குள் கால் பதித்து இருக்கிறது. தற்போதைய நிலையில், தனது இலங்கை வணிகத்தின் நிர்வாகத்தை முன்னேற்றும் வகையிலானப் பயிற்சிகளை மாத்திரம் ஆரம்பித்துள்ளது. ஆனால், மேலதிகமாக, சந்தைத் தொடர்பிலான விரிவாக்கம் மற்றும் சந்தை நிர்வாகம் என்பவற்றை  அலிபாபா கையிலெடுக்க ஆரம்பிக்கும்போது, நிச்சயமாக இலங்கை வணிகர்கள் நிலை அச்சுறுத்தலுக்குள்ளாகப் போகிறது. 

தற்போது, இணையவழி வணிகத்தை  நடத்தும் வணிகங்களுக்கு, பெரும்பாலான உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து தருவித்தே, தமது பொருட்களை விற்பனைக்கு வழங்கி வருகிறார்கள். எந்தவொரு இலத்திரனியல் பொருட்களை எடுத்து கொண்டாலும் சரி, ஏனைய உபகரணங்களை எடுத்துகொண்டாலும் சரி அவை அனைத்துமே, இலங்கை வணிகர்களினால் பெரும்பாலும் சீனாவிலிருந்தே கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும், இணைய வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகள் வாயிலாகவே, வாடிக்கையாளர்களை கவருகின்றன. இதற்கு, வணிகர்கள் மிகக் குறைவான விலையில் பொருட்களைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதற்கு, அவர்களின் ஒரே தீர்வாக, சீனத் தயாரிப்புக்களே உள்ளன. எனவே, பெரும்பாலான வணிகர்கள் தமது வணிக்கத்துக்கான சீன பொருட்களைக் கொண்டுவருவதன் மூலமாகக் கொள்ளை இலாபத்தை ஈட்டி கொள்ளுகிறார்கள். 

இந்த நிலையில், அலிபாபா நிறுவனம், இலங்கை சந்தைக்குள் உள்வருவதன் மூலமாக, சீனச் சந்தையை நேரடியாக இலங்கைக்குள் கொண்டு வர முடிவதுடன், நம்மவர்கள் இடைத்தரகர்களாக வைத்திருக்கும் இலாப அளவை விட குறைவாக இலாபத்தைக் கொண்டு, தற்போது இலங்கையிலுள்ள வணிகத்தை அடியோடு தகர்த்துவிடவும் வாய்ப்புக்கள் உள்ளன. தற்போதைய நிலையில், அலிபாபா கொள்வனவு செய்துள்ள Daraz நிறுவனத்துக்கு, இலங்கை வணிகர்களே பொருட்களை வழங்கி வருகின்றார்கள். இவர்கள் மூலமாக, இலகுவாக சந்தையில் மிக அதிகமாக கேள்விக் கொண்ட பொருட்களையும், சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கானப் பொருட்களையும் கண்டுகொள்ள, மிகநீண்டகாலம் போகாது. அதற்குப் பின், சீனாவிலிருந்து அலிபாபா நிறுவனமே நேரடியாக அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டால், சீன சந்தையை நம்பியிருக்கும் நமது வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதே நிதர்சனமாக உண்மை. 

ஒரு வணிகத்​ைத மிகப்பெரும் முதலீட்டு நிறுவனம் மிகப்பெரும் முதலீடுகளுடன் கொள்வனவு செய்கின்றபோது, அ​தைச் சுற்றியுள்ள வணிகங்களும் சிறு முதலீட்டாளர்களும், இவ்வாறான சிக்கல்நிலைக்குள் மாட்டிக்கொள்ளுவது சகஜமானது. இதன்போது, பல வணிகங்கள் காட்டற்று வெள்ளத்தில் அடித்து செல்வதுபோல, காணாமல் போய்விடுகின்றது. சில வணிகங்கள் அதிலும் தப்பிப் பிழைத்து தம்மைத் தக்கணப் பாதுகாத்துக் கொள்ளுகின்றது. குறிப்பாக, இந்த நிலை ஏற்படுகின்றபோது, ஒவ்வொரு வணிகமும் தமது தனித்துவம் வாய்ந்த வணிக உத்திகளைப் பயன்படுத்திகொள்ளுவதன் மூலமாக மட்டுமே, சந்தையில் பிழைத்துக்கொள்ள முடியும். அதாவது, வெறுமனே சீனத் தயாரிப்புக்களை மாத்திரம் நம்பியிராமல், வணிகத்தின் உற்பத்திகளை பல்வகைமைபடுத்துவதுடன், வாடிக்கையாளர்களையும் அதற்குத் தகுந்தாற்போலப் பழக்கப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், அலிபாபா போன்ற நிறுவனங்கள் சந்தையில் தமது வணிக உத்திகளை மிகப்பெரும் முதலீட்டுடன் அமுல்படுத்தும்போது, இலங்கையின் ஒருபகுதி வணிகமும், அந்த வணிகத்தை நம்பியுள்ளவர்களும் காணாமல் போவ​தைத்  தவிர்க்க இயலாது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--