2024 மே 03, வெள்ளிக்கிழமை

இலங்கையின் பொருளாதார எதிர்காலம் என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டில், இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்ட பின்பு, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றி, அரசியல் ரீதியாக மிகப்பெரும் மாற்றமாகப் பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதார நிலையில், எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.  

2020ஆம் ஆண்டுக்கென, ஒரு நிரந்தர வரவு-செலவு திட்டத்தை, இலங்கை கொண்டிராத நிலையில், தற்காலிகமாகச் சமர்ப்பிக்கப்படும் பாதீட்டின் மூலமாகவே, இதுவரை அரசாங்கத்தை நடத்தி வந்திருக்கிறது. தற்போது 2020ஆம் ஆண்டுக்கும், 2021ஆம் ஆண்டுக்குமான முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முதல்வேலை, புதிய நிதி அமைச்சின் கைகளில் இருக்கிறது. ஆனால், கடந்த பெப்ரவரி மாதத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவால் நல்லாட்சி அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட 2020க்கான தற்காலிக பாதீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த 721 பில்லியன் ரூபாய் கடன் பெறுகின்ற எல்லையை 1,088 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும்படி கேட்டிருந்தார்கள். ஆனால், மக்களின் பொருளாதாரச் சுமை அதிகரிக்கும் என்கின்ற நிலையில், அதை அனைத்துக் கட்சிகளும் எதிர்த்திருந்தன.

எனவே, கொரோனா வைரஸ் பரவுகையை இதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இன்னுமொரு தற்காலிக பாதீட்டை அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. இதன் மூலம், இந்த ஆண்டில் முதல் காலாண்டில் மட்டும், இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளக் கூடிய கடனின் அளவு, 1,088 பில்லியன் ரூபாயாக மாறியதுடன், அதை இலங்கை அரசாங்கமும் பெற்றுக்கொண்டுள்ளது. 

எனவே, 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது, துண்டு விழும் தொகையின் அளவானது மிக அதிகளவில் இருக்கும். இது மக்கள் மத்தியில், புதிய நாடாளுமன்றத்துக்கு ஓர்  அவப்பெயரை ஏற்படுத்த கூடுமென்கிற நோக்கில், மற்றுமொரு தற்காலிகப் பாதீட்டை, இலங்கை அரசாங்கம் கொண்டுவர இருக்கிறது. இது, 1,600 திரில்லியன் ரூபாய் செலவீனங்களைக் கொண்ட தற்காலிக வரவு-செலவுத் திட்டமாக இருக்கப்போகிறது.

இதன்மூலமாக, முடங்கி கிடக்கும் பொருளாதாரத்துக்குத் தேவையான நிதி உட்பாய்ச்சலைச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்தத் தற்காலிக வரவு-செலவு திட்டத்தை முழுமையாகப் பார்க்கின்றபோது, நிகழ்ச்சி நிரல் வேறுவிதமாக இருக்கிறது.  

இந்தத் தற்காலிக வரவு-செலவுத் திட்டத்தில், 200 பில்லியன் ரூபாயை கடந்த ஒரு வருடமாக கட்டி முடிக்கப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் கட்டட நிர்மாணங்களுடன் தொடர்புபட்ட நிறுவனங்களுக்கு வழங்க இருக்கிறது. இதில், சுமார் 15 பில்லியன் ரூபாய் பாடசாலைகள் சார்ந்த அபிவிருத்தியுடன் தொடர்புபட்டதாக இருக்கிறது.

இதைத் தவிர்த்து, பெருமளவான தொகை இந்த வருடத்தில் மீளச் செலுத்தவேண்டிய கடன்களுக்கும் மிக விரைவாக மக்களின் கண்துடைப்பாகச் செய்யப்படவிருக்கும் வீதி அபிவிருத்தி, மின்சாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் செலவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெளிப்படையாகச் சொல்லப்படின், அரசாங்கத்தின் நேரடிப் பங்குதாரர்களாக இருக்கும் முகவர்கள், வழங்குநர்கள், ஆதரவாளர்களை மிக விரைவாகத் திருப்திப்படுத்த வேண்டிய தேவையொன்று தற்போதைய அரசாங்கத்துக்கு உருவாகியிருக்கிறது. எனவேதான், தற்காலிக பாதீட்டுக்கு பொருத்தமான அளவு பணம் இல்லாதபோதிலும், இந்தப் பெரும்தொகையை அச்சிட்டாவது வழங்க வேண்டுமென்கிற அளவில் அரசாங்கம் செயற்படத் தயாராகி வருகிறது.

இதுவரை, பில்லியன் கணக்கான பணத்தை இந்த ஆண்டில் மாத்திரம் புதிய அரசாங்கம் அச்சிட்டு இருக்கிறது. அதற்குச் சமமான வெளிநாட்டு வருமானம் இல்லாதநிலையில், மிகவிரைவாகவே பணவீக்க நிலையொன்றை எதிர்கொள்ள இருக்கிறோம் என்பதே உண்மை. 

இந்த, 1,600 திரில்லியன் ரூபாய் பாதீடானது, நேரடியாகப் பொருளாதார செயற்பாடுகளில் போதுமான தாக்கத்தைச் செலுத்தாத போதிலும், வங்கிகளின் மூலமாகப் பொருளாதாரத்தை முன்னெடுக்கக்கூடிய வகையிலான கடன்களை வழங்கவும் அதன் மூலமாகக் காசுப் பாய்ச்சலை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க முடியுமெனவும் சமூர்த்தி, நுண்நிதியியலுக்குப் பொறுப்பான அமைச்சர் கருத்தை வெளியிட்டு இருக்கிறார். 

கொரோனா வைரஸ் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறோம்.  சுமார் மூன்று மாதங்கள், இலங்கை முழுமையாக இயங்காத நிலையிலும், அதைத் தொடர்ந்து நடைமுறைகளில் மாற்றம் வந்தபோதிலும், மிகச்சில துறைசார்ந்த செயற்பாடுகளே முழுமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொருளாதார ரீதியாக மிகப்பெரும் பிரச்சினைகளை அனைத்து வணிகங்களுமே எதிர்கொண்டுள்ளன. இதற்கு உடனடித் தீர்வாக, கோட்டாபய ராஜபக்‌ஷவால் முன்மொழியப்பட்ட ஒன்றுதான் இலங்கை மத்திய வங்கி வணிகங்களுக்கு இலகுகடனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். இந்தப் பேச்சுவார்த்தையிலேயே ஜனாதிபதிக்கும் - இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகளுக்கும் முரண்பாடு ஒன்று ஏற்பட்டிருந்தது.

ஜனாதிபதி குறிப்பிடுவதுபோல, கடனை வழங்குவதற்குப் போதிய பணமில்லாத சூழ்நிலையில், அதை அச்சிட்டு வழங்க வேண்டிய நிலைக்கே மத்திய வங்கி தள்ளப்பட்டிருந்தது. ஆனால், வேறுவழியின்றி ஜனாதிபதியின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, செயற்பட வேண்டிய நிலைக்கு, மத்திய வங்கி ஆளாகி இருக்கிறது. 

இதுவரை மாத்திரம், இலங்கை மத்திய வங்கி 36,489 கடன் கோரல்களை அனுமதித்து அவர்களுக்கு 100,017 மில்லியன் ரூபாய் அளவிலான கடனை வழங்கி இருக்கிறது. இதில் பூச்சிய வட்டிவீத கடன்களும் மிகக்குறைந்த வட்டிவீத கடனையும் கொண்டிருக்கிறது. இந்த மொத்தக் கடன்தொகையில் 68.5 பில்லியன் ரூபாய் இதுவரை முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டிருப்பதுடன், மிகுதி இரண்டாம் கட்டமாக, விநியோகம் செய்யப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது. தற்காலிக பாதீட்டிலும் ஒரு சிறுபகுதி கடன் வழங்கலுக்கு ஒதுக்கப்படும் சந்தர்ப்பம் இருப்பதன் காரணமாக, குறைந்த வட்டியில் தொழிற்படு மூலதனத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை, செப்டெம்பர் 30ஆம்  திகதி வரை அதிகரித்து இருக்கிறது. 

இந்தச் சூழ்நிலைகள், இலங்கை அரசாங்கம் போதிய வருமானம், வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டிராத நிலையில் மேற்கொண்டு வரும் திட்டங்களாக இருக்கின்றன. ஒருவகையில், இத்தகைய திட்டங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்கிற நிலையிருந்தாலும், இவற்றை எல்லை மீறி நடைமுறைப்படுத்துவதென்பது, நாட்டின் பொருளாதாரச் சூழலுக்கு மிகப்பெரும் பாதகமாக அமையவுள்ளது என்பதே, எல்லோரினதும் குற்றச்சாட்டாகவும் எதிர்வு கூறலுமாக இருக்கிறது. 

இந்த ஆண்டுக்காக, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வரவேண்டிய சுமார் 1,000 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர், இன்னமும் இலங்கைக்கு வந்து சேரவில்லை. இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் எவையும் இவ்வாண்டில் நிறைவேற்றப்படாத நிலையில், இந்தத் தொகை இலங்கைக்குக் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் ஒரு பகுதியை நிறைவேற்றி, முதற்கட்டமாக 800 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. 

இவை அனைத்துமே, இலங்கைக்குள் வெளிநாட்டு நாணயங்களை வருமானமாகவோ, கடனாகவோ கொண்டு வருவதன் மூலமாக, பணவீக்க நிலையைக் கட்டுப்படுத்தும் குறுங்கால நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. 

இவற்றுக்கு மேலாக, 2015ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் வருமானவரி திணைக்களம் மிகப்பெரும் வருமானம் ஒன்றைத் தவறவிட்ட நிறுவனமாகத் தனித்து நிற்கிறது. 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இந்தத் திணைக்களத்துக்கு வரவேண்டிய சுமார் 3 பில்லியன் ரூபாய் வருமானம் இன்னும் வந்து சேரவில்லை என்கிற தகவல் வௌிவந்திருக்கிறது. 

உள்நாட்டில் பெரும்பாலான வரி செலுத்துநர்கள், வருமான வரி திணைக்களத்துக்கு காசோலைகள் மூலமாகவே வருமானத்தைச் செலுத்தி வருகிறார்கள். இதில் இதுவரை 8,060 காசோலைகள் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு, பணமில்லை என மீள அனுப்பப்பட்டவையாக இருக்கின்றன. இவற்றின் மொத்த தொகையே 3 பில்லியன் ரூபாயாக இருக்கிறது. 

இதுவரை, இந்த வரிகளைச் செலுத்தாதவர்கள் விவரம்வெளிவராத நிலையிலும், குறிப்பிட்ட சில வரி செலுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுவும் நாட்டின் வருமானத்தில் மிகப்பெரும் குறைவை ஏற்படுத்தியுள்ளது. வருமானம் இல்லாத நிலையில், அரச இயந்திரங்களின் இத்தகைய வினைதிறனற்ற நிலையும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் இக்கட்டுக்குள் தள்ளி இருக்கிறது.   

இதிலிருந்து மீட்சி பெறுவதென்பது எதிர்வரும் காலங்களில் மிகப்பெரும் சவாலாக இருக்கப் போவதுடன், இந்தப் புதிய அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான பொருளாதார செயற்பாடுகளும் சாமனிய பொதுமக்களைப் பாதிக்கப்போகின்ற நிலையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது கவலை தருவதாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .