2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

‘கடனீட்டுக் கடிதம் இரத்துக்கு வங்கி ஒரு பிரச்சனையல்ல’

Gavitha   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியினால் திறக்கப்பட்ட கடனீட்டுக் கடிதங்கள் சர்வதேச வங்கிகளினால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த அறிக்கைகள் தொடர்பில் இலங்கை வங்கியின் தவிசாளர் காஞ்சன ரத்வத்தே கருத்துத் தெரிவிக்கையில், 

“வாடிக்கையாளர் கொண்டிருக்கும் பிரச்சனைகள் காரணமாகவே சர்வதேச வங்கிகளில் கடனீட்டுக் கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மாறாக, வங்கியின் தரப்படுத்தல் அல்லது நாட்டின் தரப்படுத்தல் குறைக்கப்படுவதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை” என்றார். 

இலங்கையின் வர்த்தகங்களினால் வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடனீட்டுக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நாட்டின் அரச வங்கிகளால் வழங்கப்பட்ட கடனீட்டுக் கடிதங்கள் இவ்வாறு நிராகரிக்கப்படுவதாகவும், சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் நிதித் தரப்படுத்தலை குறைத்திருந்தமையினால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்து, கடந்த வாரங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை வங்கியின் தவிசாளர் காஞ்சன ரத்வத்தே மேலும் குறிப்பிடுகையில், “சாதாரணமாக வியாபாரமொன்றை முன்னெடுக்கும் போது, கடனீட்டுக் கடிதங்கள் நிராகரிக்கப்படுவது வழமை. இதற்கு பொதுவில் வாடிக்கையாளர் அல்லது விநியோகத்தரிடையே காணப்படும் ஏதேனும் பிரச்சனைகள் அல்லது அந்தக் கடனீட்டுக் கடிதத்திற்கான நியதி மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்றமை காரணமாக அமையும். இது சாதாரணமாக இடம்பெறுகின்ற ஒரு விடயமாகும். அதாவது வங்கிகளில் தொழிற்படாக் கடன்கள் காணப்படுவதைப் போன்று, இதுவும் ஒரு சாதாரணமாக விடயமாகும். வருடாந்தம் சில கடனீட்டுக் கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றமை வழமையாகும்.” என்றார்.

இலங்கை வங்கி சிறந்த ஐந்தொகையை கொண்டிருப்பதுடன், நாட்டின் முதல் தர வங்கியாகவும் திகழ்கின்றது. அத்துடன், இலங்கை வங்கிக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உத்தரவாதத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 150% இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது. நாட்டின் கடன் தரப்படுத்தல் குறைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இலங்கை வங்கி 600க்கும் அதிகமான கடனீட்டுக் கடிதங்களை திறந்துள்ளதுடன், இவற்றில் எவ்விதமான பிரச்சனைகளும் எழவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட வைப்புக் கணக்கின் மாபெரும் பங்களிப்புதாரராக இலங்கை வங்கி திகழ்கின்றது.

“2021ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் ஆண்டாக அமைந்திருக்கும். 2020 ஆம் ஆண்டில் நாம் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தோம். ஆனாலும், இந்த ஆண்டில் நிலைமை படிப்படியாக முன்னேறும் என எதிர்பார்ப்பதுடன், கொவிட்-19 வக்சீன்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்பதால், மீட்சியை உறுதியாக எதிர்பார்க்க முடியும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .