2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் கொவிட்-19 இன் தாக்கம்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பொருளாதாரங்களை பாதித்துள்ள நிலையில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அத்தாக்கத்திலிருந்து மீட்சியடைவதற்கு சுமார் எவ்வளவு காலம் செல்லும் என்பது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ரிசேர்ச் அண்மையில் வெளியிட்டிருந்தது. 

இதில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விற்பனைகள், சுகாதார பராமரிப்பு சாதனங்கள் மற்றும் சேவைகள், தொலைத்தொடர்பாடல், வலு, உணவு, குடிபானம் மற்றும் புகையிலை, காப்புறுதி, வங்கிகள், பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகள், போக்குவரத்து, மூலதனப் பொருட்கள், நுகர்வோர், பாவனை பொருட்கள் மற்றும் ஆடை உற்பத்தி, விற்பனைகள், நுகர்வோர் சேவைகள், மூலப்பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விற்பனைகள் குறுங்கால மீட்சி

ஆரம்பத்தில் உணவு விநியோகத்தில் தடை ஏற்படும் எனும் அச்சம் காரணமாக நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை முந்தியடித்து அளவுக்கதிகமாக, தமது தேவைகளையும் விஞ்சி கொள்வனவு செய்தனர். ஆனாலும், காலப் போக்கில் ஒன்லைன் வியாபாரங்கள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனைகள் முன்னெடுக்கப்பட ஆரம்பித்தவுடன், நுகர்வோர் பெருமளவில் தம்மை அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டதை அவதானிக்க முடிந்தது. இதனால் இந்தத் துறையின் வியாபாரத் தொடர்ச்சியும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

உணவகங்களை பொறுத்தமட்டில் மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளன. தொற்றுப் பரவல் காரணமாக உணவகங்களை நாடுவதை பொது மக்கள் பெருமளவில் குறைத்துள்ளதுடன், இதனால் உணவகங்களின் வியாபார செயற்பாடுகள் முழுமையாக இயங்க முடியாத நிலையிலுள்ளன.

இந்நிலையில் 2021 நிதியாண்டு வரையில் தற்போதைய சூழல் காரணமாக கிளைகளின் விஸ்தரிப்பு செயற்பாடுகளில் வீழ்ச்சி ஏற்படும் என மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தத் துறை அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் துறையாக அமைந்திருப்பதால், ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில் வேகமாக மீட்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பங்குகள் – காகில்ஸ், சிரிஹோல்டிங்ஸ்

சுகாதார பராமரிப்பு குறுங்கால மீட்சி

மருந்துப் பொருட்கள் இறக்குமதியில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் காணப்படாத நிலையில், சந்தையில் எவ்விதமான தட்டுப்பாடுகளையும் தோற்றுவிக்காது என கணிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருந்துப் பொருட்களின் விநியோகம் என்பது இலங்கைச் சந்தையை பொறுத்தமட்டில் புதிய விடயமாக அமைந்துள்ளதுடன், நெருக்கடி மிக்கதாகவும் அமைந்திருக்கும்.

தனியார் துறையிலும் பிசிஆர் பரிசோதனையை ரூ. 6000 க்கு மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

வியாபாரச்செயற்பாடுகள் சுகாதார பராமரிப்பு துறையில் முன்னெடுக்கப்படுகின்றமையினால் இந்தத் துறையில் குறைந்தளவு தாக்கம் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறுங்கால அடிப்படையில் இந்தத் துறை மீட்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய பங்குகள் – ஆசிரி, நவலோக, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்

தொலைத் தொடர்பாடல் குறுங்கால மீட்சி

பிற்கொடுப்பனவு பிரிவு பாவனையில் அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், சில பகுதிகளில் ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால் முற்கொடுப்பனவு பிரிவு பாவனையில் சற்று வீழ்ச்சி பதிவாகக்கூடும். எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றின் பின்னரான சூழலில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் சிறந்த நிலையில் இயங்கும், ஏனெனில் வியாபார செயற்பாடுகள் அனைத்தும் தொடர்பில் இருப்பதற்கு இந்நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தும். உறுதியான இணைப்புச் சேவையை பெற்றுக் கொள்வதற்கு என்பதும் மக்கள் மத்தியில் ஒரு இன்றியமையாத விடயமாகிவிட்ட சூழலில் நீண்ட கால அடிப்படையில் இந்த துறையின் வியாபாரங்கள் சிறப்பாக செயலாற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் டயலொக் நிறுவனம் நாணயப் பெறுமதி வீழ்ச்சியால் பெருமளவு இழப்புகளை சந்தித்துள்ளதால், 2020 முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருமானத்தில் சரிவை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

தொடர்புடைய பங்குகள் – டயலொக் அக்சியாடா, ஸ்ரீ லங்கா ரெலிகொம்

வலு குறுங்கால மீட்சி

உலக சந்தையில் கேள்வி குறைவு மற்றும் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய போதியளவு வசதிகள் இன்மை போன்ற காரணத்தினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாமை காரணத்தினால் வலுத்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இலாபமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எவ்வாறாயினும் ஊரடங்கு அமலில் இருந்தமை மற்றும் மக்களின் நடமாட்டம் குறைவடைந்துள்ளமை காரணமாக இவற்றின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியிருக்கும். எவ்வாறாயினும் வியாபாரங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டதும், அவற்றின் பாவனை அதிகரிப்பதால் அதன் அனுகூலத்தை வலுத்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அனுபவிக்கும்.

தொடர்புடைய பங்குகள் – லங்கா ஐஓசி, லாவ்ஸ் காஸ் லங்கா

உணவு, குடிபானம் மற்றும் புகையிலை 

உணவு மற்றும் குடிபானங்கள் குறுங்கால மீட்சி

மதுபானங்கள் மற்றும் புகையிலை குறுங்கால மீட்சி

பெருந்தோட்டங்கள் நீண்ட கால மீட்சி

உணவு மற்றும் குடிபானங்கள் துறை விநியோகத்தில் காணப்பட்ட சிக்கல்கள் காரணமாக, நுகர்வோருக்கு தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்பட்ட போதிலும், ஒன்லைனில் கொள்வனவு செய்து பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த செயற்பாடுகளை கடந்த ஒரு மாத காலப்பகுதிக்கு மேலாக சுமூகமாக இடம்பெறுவதை காண முடிகின்றது. ஊரடங்கு நிலை முற்றாக தளர்த்தப்பட்டதன் பின்னர், நுகர்வோரின் கொள்வனவுகள் மீண்டும் அதிகரிப்பதுடன், ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில் இந்தத் துறை வேகமாக மீட்சியடையும். 

தொடர்புடைய பங்குகள் நெஸ்லே, சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், சிலோன் க்ரெய்ன் எலிவேற்றர்ஸ்

மதுபானங்கள் மற்றும் புகையிலை

புகையிலை மற்றும் மதுபான துறையில் சம்பளக் குறைப்பு மற்றும் ஆட்கள் குறைப்பு இடம்பெறுகின்ற நிலையில், மத்தியளவு கால தாக்கத்தை இந்த துறை அனுபவித்தாலும், 6-9 மாதங்களில் இந்தத் துறை மீண்டும் மீட்சியடையும் என மதிப்பிட்டுள்ளோம்.

தொடர்புடைய பங்குகள் சிலோன் டொபாக்கோ கம்பனி, லயன் பிரெவரி, டிஸ்டிலரீஸ்

பெருந்தோட்டங்கள்

கடந்த 3 மாத காலமாக நிலவிய வரட்சியான காலநிலையுடன் கொவிட்-19 பரவலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மொத்த பெருந்தோட்ட உற்பத்தியில் 40 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் பதிவாகிய தேயிலை ஏல விற்பனை விலை, குறுகிய கால அடிப்படையிலமைந்ததென நாம் கருதுவதுடன், உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையானது, இலங்கைத் தேயிலையை அதிகளவு கொள்வனவு செய்யும் அந்நாடுகளின் தேயிலை கொள்வனவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தொடர்புடைய பங்குகள் வட்டவளை, எல்பிட்டிய பிளான்டேஷன்ஸ், மஸ்கெலிய பிளான்டேஷன்ஸ்

காப்புறுதி 

பொது காப்புறுதி குறுங்கால மீட்சி

இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வாகனத்துக்கும் கண்டிப்பாக காப்புறுதி ஒன்று இருக்க வேண்டியது முக்கியமானதாகும். இந்நிலையில் பொதுக் காப்புறுதி நிறுவனங்களுக்கு இந்த காப்புறுதிக்கான கேள்வி தொடர்ந்தும் கிடைத்த வண்ணமிருக்கும். எவ்வாறாயினும் மார்ச் 1ஆம் திகதி முதல் ஜுன் 30ஆம் திகதி வரை காப்புறுதி தவணைக் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளமையானது குறுங்கால அடிப்படையில் இந்நிறுவனங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். வாகன இறக்குமதியும் மூன்று மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியின் பின்னர், இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்படுமாயின், பொதுக் காப்புறுதித் துறையில் மீட்சியை எம்மால் அவதானிக்க முடியும். வட்டி வீதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களும் காப்புறுதி நிறுவனங்களை பாதிக்கும். 

தொடர்புடைய பங்குகள் செலிங்கோ இன்சூரன்ஸ், பீப்பள்ஸ் இன்சூரன்ஸ், எச்என்பி அஷ்யூரன்ஸ்

ஆயுள் காப்புறுதி நீண்ட கால மீட்சி

தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஆயுள் காப்புறுதியின் அளவு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. காப்புறுதி தவணைக் கட்டணங்கள் உயர்வாக அமைந்திருப்பதுடன், அவற்றின் முதிர்வு அனுகூலப் பெறுமதி குறைவாக அமைந்திருப்பது இதற்கு பிரதான காரணமாகும். நெருக்கடியான பொருளாதார சூழல் நிலவும் காலப்பகுதியில் ஆயுள் காப்புறுதிக்கான தவணைக் கட்டணங்களை செலுத்துவது என்பது பெருமளவான சந்தர்ப்பங்களில் தடைப்படுகின்றது. வங்கி வைப்புகள் சாதாரணமாக ஆயுள் காப்புறுதி திட்டங்களுக்கு மிகவும் போட்டியானவையாக அமைந்துள்ளன. வட்டி வீதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களும் காப்புறுதி நிறுவனங்களை பாதிக்கும். 

தொடர்புடைய பங்குகள் செலிங்கோ இன்சூரன்ஸ், சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ், எச்என்பி அஷ்யூரன்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ்

வங்கிகள் நீண்ட கால மீட்சி

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதார செயற்பாடுகள் பெரும்பாலும் முடங்கியுள்ளதால், கடனுக்கான கேள்வியும் குறைந்துள்ளது. ஆரம்பத்தில் குறைந்த வட்டி வீதங்கள் அமல்படுத்தப்படுகின்றமையால், வியாபாரங்கள் அதிகளவு கடன் பெற்றுக் கொள்ளும் எனும் எதிர்பார்ப்பு இந்த தொற்றுப் பரவலுடன் இல்லாமல் போய்விட்டது. குறைந்தளவு வட்டிச் சூழலால், வங்கிகளின் தேறிய வட்டி எல்லைப் பெறுமதி வீழ்ச்சியடைவதுடன், தரகு மற்றும் வருமானங்களும் வீழ்ச்சியடையும். அரசாங்கத்தினால் வழங்குமாறு பணிக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் காரணமாக வங்கிகளின் கடன் இடர் நிலை அதிகரிக்கும். வங்கிகளின் செயற்பாடுகளை உறுதி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் குறுங்காலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய பங்குகள் கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, செலான் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி 

பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகள் நீண்ட கால மீட்சி

மோசமான பொருளாதாரச் சூழலால் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து அதிகளவு நிதி மீளப் பெறுகைகள் இடம்பெறுகின்றன. அடகுச் சேவைகள் போன்றன குறைந்த தரம் வாய்ந்த சொத்துக்கள் அதிகரிப்பு பெரும் சவால்களை தோற்றுவிக்கும். மோசமான பொருளாதார சூழலால் மீட்சிச் செயற்பாடுகள் மந்தமடையும். அரசாங்கத்தினால் வழங்குமாறு பணிக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் காரணமாக நிதிச் சேவைகளை வழங்கும் கடன் இடர் நிலை அதிகரிக்கும். வாகன இறக்குமதிகள் ஸ்தம்பித்துள்ளதால் லீசிங் வியாபாரங்கள் பாதிக்கும்.

தொடர்புடைய பங்குகள் எல்பி ஃபினான்ஸ், பீப்பள்ஸ் லீசிங், எல்ஓஎல்சி ஃபினான்ஸ், சென்ரல் ஃபினான்ஸ், கொமர்ஷல் கிரெடிட்

போக்குவரத்து நீண்ட கால மீட்சி

உற்பத்தி மற்றும் விருந்தோம்பல் துறையுடன் போக்குவரத்து வியாபாரங்கள் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளன. இந்த இரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள தாக்கங்களினால் போக்குவரத்துத் துறையும் பின்னடைவை எதிர்நோக்கும்.

தொடர்புடைய பங்குகள் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ்

மூலதன பொருட்கள் – 

கேபிள்கள் குறுங்கால மீட்சி

கொவிட்-19 பரவல் காரணமாக அடுத்த ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்க திட்டங்கள், நிர்மாணத்திட்டங்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து கேபிள்கள் உற்பத்தியாளர்களுக்கான கிடைப்பனவுகள் கிடைப்பது தாமதிக்கலாம். தொற்றுப் பரவலுக்கு முன்னர் காணப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் மூலமான கொள்வனவுகள் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்த போதிலும், தொற்றுப் பரவலின் பின்னர் இந்த வருமானம் வீழ்ச்சியடையலாம். செப்பின் விலையில் வீழ்ச்சியும் கேபிள் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக காணப்பட்டாலும், ரூபாயின் மதிப்பிறக்கத்தால் இந்த அனுகூலத்தை முழுமையாக பெறமுடியாத நிலை நிலவலாம்.

தொடர்புடைய பங்குகள் ஏசிஎல் கேபிள்ஸ், களனி கேபிள்ஸ், சியெர்ரா கேபிள்ஸ்

நிர்மாண பொருட்கள் நீண்ட கால மீட்சி

தொற்றுப் பரவல் காரணமாக நிர்மாணத்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் ஸ்தம்பித்துள்ளன. நுகர்வோர் மத்தியில் குடிமனைகள், தொடர்மனைகள் கொள்வனவுக்கான கேள்வி குறைவடையும். அதிகளவு கடன் மற்றும் குறைந்தளவு நிதி இருப்புகளை கொண்டிருக்கும் நிர்மாணத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிகளவு நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய பங்குகள் அக்சஸ் என்ஜினியரிங், றோயல் செரமிக்ஸ், லங்கா வோல் டைல்ஸ், லங்கா டைல்ஸ், அலுமெக்ஸ்

பன்முகப்படுத்தப்பட்டவை நீண்ட கால மீட்சி

பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் சுற்றுலாத்துறை மற்றும் அத்தியாவசியமற்ற நுகர்வோர் விற்பனைத்துறைகளில் அதிகளவு ஈடுபாட்டை கொண்டுள்ளன. வினைத்திறனற்ற மற்றும் ஒரு துறையில் பெருமளவு தங்கியுள்ள நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய பங்குகள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சன்ஷைன் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டா ரீகல், எயிட்கன் ஸ்பென்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஹேலீஸ்

நுகர்வோர், பாவனை பொருட்கள் மற்றும் ஆடை உற்பத்தி, விற்பனைகள் நீண்ட கால மீட்சி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடமிருந்தான கேள்விகள் வீழ்ச்சியடைவதால் வருமானம் பாதிக்கும். முகக் கவசங்கள் போன்ற மாற்றுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ள போதிலும், உள்ளாடைகள் மற்றும் இதர ஆடை உற்பத்திகளுக்கு மாற்றீடாக இவை அமைந்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, மத்திய முதல் நீண்ட கால அடிப்படையில் மீட்சி இந்த துறையில் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பங்குகள் டீஜே லங்கா, ஹேலீஸ் ஃபப்ரிக்

விற்பனைகள் நீண்ட கால மீட்சி

வீட்டுப்பாவனை பொருட்கள் விற்பனைத்துறை இரு காரணிகளால் ஸ்தம்பித்துள்ளன. முதலாவது சமூக தூரப்படுத்தல் மற்றையது அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளமை. நாணய மதிப்பிறக்கம், விற்பனை வருமான வீழ்ச்சி போன்றவற்றால் இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய பங்குகள் சிங்கர் ஸ்ரீ லங்கா, ஒடெல்

வாகனங்கள் விற்பனை நீண்ட கால மீட்சி

வாகன இறக்குமதிகளுக்கான தடை மற்றும் சர்வதேச சந்தையில் விநியோகத் தொடர்களில் அதிகளவு தங்கியுள்ளமை போன்ற காரணிகளால் 12 – 18 மாத கால அடிப்படையிலான நீண்ட கால மீட்சியை இந்தத் துறையில் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

தொடர்புடைய பங்குகள் யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா லிமிடெட்

நுகர்வோர் சேவைகள் நீண்ட கால மீட்சி

சமூக தூரப்படுத்தல், பிரயாண கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் காரணமாக சுற்றுலாச் சேவைகள் பெருமளவு பாதிப்படையும். 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து நுகர்வோர் சேவைகள் பிரிவு மீட்சியை பதிவு செய்த வண்ணமிருந்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறையில் ஏற்படும் தாக்கத்தை தணிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி நிவாரணங்களை வழங்கியுள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்காக ஐரோப்பிய ஒன்றியம் 3.5 மில்லியன் யூரோக்களை வழங்க முன்வந்துள்ளமை துறைக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

தொடர்புடைய பங்குகள் ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ், அனிலானா ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ்

மூலப்பொருட்கள் நீண்ட கால மீட்சி

நிர்மாணத்துறை பணியாளர்கள் சமூகமளிக்காமையால் உடனடியாக பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இதனால் நிர்மாணத்திட்டங்கள் பூர்த்தியடைவது தாமதிக்கும். வாகன பாவனையில் கட்டுப்பாடுகள் காரணமாக செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகலாம். தற்போதைய சூழலில் கண்ணாடி உற்பத்தி செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளதால் பிரமால் க்ளாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் மந்தமடையலாம்.

தொடர்புடைய பங்குகள் டோக்கியோ சீமெந்து, ஏசிஎல் பிளாஸ்டிக்ஸ், பிரமால் க்ளாஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஹேகார்ப்

ரியல் எஸ்டேட் நீண்ட கால மீட்சி

நிர்மாணத்திட்டங்களின் தாமதமடைவதால் இந்தத்துறை பாதிக்கப்படும். பொருளாதார வீழ்ச்சி காரணமாக, இந்தத் துறையின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகும். ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களிலிருந்தும் பணத்தை திரட்டிக் கொள்வது தாமதிக்கலாம்.

தொடர்புடைய பங்குகள் ஓவர்சீஸ் ரியால்டி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X