2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஆறு மாதங்களுக்குள் நட்டமீட்டும் பங்குமுகவர் நிறுவனங்கள் மூடப்படலாம்?

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை தொடர்ந்தும் குறைந்த பெறுமதிகளைப் பதிவு செய்து வரும் நிலையில், பங்குப்பரிவர்த்தனையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முகவர்களாக செயலாற்றும், பங்கு முகவர் நிறுவனங்கள் நட்டமீட்டி வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தொடர்ச்சியாக நட்டமீட்டும் சில பங்கு முகவர் நிறுவனங்கள் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் தமது செயற்பாடுகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

24 பங்கு முகவர்கள் மத்தியில் பிரிக்கப்படுவதற்கு போதியளவு முகவர் தரகு கட்டணம் காணப்படாமை மற்றும் குறைந்தளவு பண விநியோகம் நிலவுகின்றமை போன்றன இந்நிலைக்கு பங்குமுகவர்களை தள்ளியுள்ளன.

உறுதியான தாய் நிறுவனங்களின் பின்புலத்துடன் இயங்கும் பங்கு முகவர் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்பதுடன், தனித்து பங்கு முகவர்களாக செயற்படும் நிறுவனங்கள் பெருமளவு சிக்கல்களை எதிர்கொள்ளும். ஏற்கனவே அந்நிறுவனங்கள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அடுத்த ஆறு மாத காலப்பகுதியில் இந்நிலைமை மேலும் மோசமடைய அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஏற்​ெகனவே சில முகவர் நிறுவனங்கள், தமது நிறுவனத்தின் விற்பனை பற்றி விளம்பரம் செய்துள்ளன. ஏனைய சில நிறுவனங்கள் அதிகார அமைப்புகளுடன் ஒழுங்குபடுத்தல் தொடர்பான முறுகல் நிலையை எதிர்கொண்டுள்ளன.

Navara Securities (Pvt) Ltd, TKS Securities, Claridge Stockbrokers, Nation Lanka Equities (Pvt) Ltd போன்ற நிறுவனங்கள் தமது வியாபார செயற்பாடுகளை கடந்த ஆண்டு முதல் நிறுத்தியுள்ளன. 2017 ஒக்டோபர் மாதம் முதல் NLL செயற்பாடுகளை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இடைநிறுத்தியிருந்ததை தொடர்ந்து, 2018 ஜனவரி மாதம் முதல்  NSL தனது செயற்பாடுகளை தன்னிச்சையான தீர்மானத்தின் பிரகாரம் நிறுத்திக் கொள்ள தீர்மானித்திருந்தது.

ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், 2019ஆம் ஆண்டுக்கான வியாபார இலக்குகளை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையாது என துறை நம்பிக்கையை கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தற்போது நிலவும் சூழலில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் குறைந்த பெறுமதிகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக வங்கிப் பங்குகள் முகப் பெறுமதியில் 0.6  ஆக விற்பனையாகின்றன. இவ்வாறான சந்தைச் சூழலில் பங்கு முகவர் நிறுவனமொன்றுக்கு தனது வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 5 மில்லியன் ரூபாய் வரை தேவைப்படுகின்றது. எனவே, சந்தையில் நிலைத்திருப்பது என்பது பெறுமதியற்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர் மட்ட அர்ப்பணிப்பின்றி, மூலதன சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி கேள்விக்குறியானதாகவே அமைந்திருக்கும். துறைசார் மூலோபாயத் திட்டங்களை நிறைவேற்றுவதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் நிலவும்.

சிங்கப்பூரின் பிலிப் செக்கியுரிட்டீஸ் மற்றும் எம் எம் உதேஷி ஆகியோருக்கிடையிலான இணைந்த வியாபார நடவடிக்கையாக ஆஷா பிலிப் செக்கியுரிட்டீஸ் லிமிடெட் இயங்கி வந்த நிலையில், மே மாதத்தின் முற்பகுதியில் பிலிப் செக்கியுரிட்டீஸ் குறித்த வியாபாரத்திலிருந்து வெளியேறியிருந்ததன் காரணமாக, ஆஷா செக்கியுரிட்டீஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட நிறுவனத்தின் உரிமை பங்கு வழங்கலில் பிலிப் செக்கியுரிட்டீஸ் பங்கேற்கவில்லை, ஏனைய பங்குதாரர்கள் இந்த பங்குகளை பெற்றுக் கொண்டதுடன், ஏற்கனவே 60 சதவீத பங்குகளை கொண்டிருந்த எம் எம் உதேஷி, தனது உரிமையாண்மையை 80 சதவீதமாக உயர்த்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .