2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சுற்றுலா சென்ற இடத்தில் பயங்கரம்... உயிருடன் அடைத்து ஆற்றில் வீசப்பட்ட தம்பதி

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூட்கேஸில் உயிருடன் அடைத்து ஆற்றில் வீசி தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் கம்பேங் பேட்டில் பிங் என்ற ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது ஆற்றில் ஒரு சூட்கேஸ் மிதந்து வந்துள்ளது. அந்த சூட்கேஸை மீன்கள் கடித்துத் தின்றுகொண்டு இருந்ததைப் பார்த்து அதை திறந்துள்ளார். 

அப்போது சூட்கேஸுக்குள் ஒரு ஆணின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் உடனே இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

விரைந்து வந்த பொலிஸார் சூட்கேஸுக்குள் இருந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். 

பிரேத பரிசோதனை முடிவில் அந்த நபர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் அவரை உயிருடன் சூட்கேஸுக்குள் அடைத்து வீசியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து உயிரிழந்த நபர் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் சீனாவை சேர்ந்த வாங் ஜூன் (30) என்பதும், அவரது மனைவி ஜூ பிங் (28) உட்பட 13 பேருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்துள்ளது. 

இவர்கள் அனைவரும் பட்டாயா என்ற பகுதியில் 3 வில்லாக்களை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 

இவர்களில் வாங் ஜூன் மற்றும் ஜூ பிங்கை தவிர மற்றவர்கள் அனைவரும் சீனாவுக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வில்லாவில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். 

அப்போது அறையில் ரத்தக்கறையும், சண்டை போட்டதற்கான தடையங்களும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே அப்பகுதி மக்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்த நபர்கள் சிலர் இரண்டு சூட்கேஸை ஆற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் அந்த கார் டிரைவரை கண்டுபிடித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், சீனாவை சேர்ந்த நான்கு பேர் காரை புக் செய்ததாகவும், அவர்களில் இரண்டு பேர் குண்டாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் ஐந்து சூட்கேஸை காரில் ஏற்றிய அவர்கள், கம்பேங் பேட்டில் பிங் ஆற்றில் இரண்டு சூட்கேஸை வீசியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் மற்றொரு சூட்கேஸில் வான் ஜூனின் மனைவி ஜூ பிங் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில் மற்றொரு சூட்கேஸை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .