2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

டைட்டானிக்கிலிருந்து மீட்கப்பட்ட நெக்லஸ் கண்காட்சியிலிருந்து திருடப்பட்டது

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

டைட்டானிக் கப்பலிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் உல்லாச பூங்காவொன்றில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொப்பன்ஹேகனில் உள்ள திவோலி களியாட்ட பூங்காவில் கண்காட்சியொன்றுக்காக இந்த நெக்லஸ் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை இந்த நெக்லஸ் காணாமல் போனதாகவும் அவ்வேளை அந்த நெக்லஸுக்கு பாதுகாப்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞை ஒலி ஒலிக்கவில்லை எனவும் ஏ.எவ்.பியிடம்  திவோலி பூங்காவின் பேச்சாளர் டோர்பன் பிலாங்க் தெரிவித்துள்ளார்.

இந்த நெக்லஸ் சுமார் 19,000 டொலர் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

'இதனை திருடியவர்கள் தொழில்சார் ரீதியானவர்கள் அல்ல என நாம்  கருதுகிறோம். ஏனெனில் இக்கண்காட்சியில் அதைவிட பெறுமதியான நகைகளும் இருந்தன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மியுஸீலியா எனும் நிறுவனம் இக்கண்காட்சியை நடத்துகிறது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த லூயிஸ் பெரைய்ரோ இது தொடர்பாக தெரிவிக்கையில் 'இந்த நெக்லஸானது அமெரிக்காவைச் சேர்ந்த வைட்னர் குடும்பத்தினருக்கு உரியதாகும். டைட்டனிக் கப்பலில் பயணம் செய்த மிக செல்வந்த குடும்பங்களில் வைட்னர் குடும்பமும் ஒன்றாகும்' எனக் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் அந்த நெக்லஸ் சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்டது என்பதால் அதனை ஒருபோதும் திருடர்கள் விற்பனை செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நெக்லஸ் எலினோர் வைட்னர் என்பவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என பிளேங் கூறியுள்ளார். டைட்டானிக் விபத்தில் காப்பாற்றப்பட்டவர்களில் எலினோர் வைட்னரும் ஒருவர்.  ஆனால் அந்த நெக்லஸானது இவ்விபத்தில் இறந்த ஒரு சாதாரண நபரின் சட்டைப் பைக்குள் கிடந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது என அவர் விபரித்துள்ளார்.

இந்த நெக்லஸை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 1000 அமெரிக்க டொலர்களை பரிசாக தருவதாக திவோலி பூங்காவின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த கண்காட்சியானது எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.

மூழ்கடிக்கப்பட முடியாது என கருதப்பட்ட டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0

  • sajith Friday, 23 September 2011 03:23 AM

    அல்லாஹ்வின் வல்லமைக்கு முன்னாள் எந்த சக்தியும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X