2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டு நிகழ்வில் நீதி அமைச்சு திடீர் தலையீடு

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில், நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் ஒழுங்கமைப்பில், நீதி அமைச்சின் திடீர் தலையீட்டால், சட்டத்தரணிகள் விசனமடைந்தனர். 

இதனால், நிகழ்விலிருந்து வெளியேற முடிவெடுத்த சட்டத்தரணிகள், இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் அதிதியாகக் கலந்துகொண்டதால், அவருக்கு மதிப்பளித்து, சட்டத்தரணிகள் அந்த முடிவைக் கைவிட்டதாக அறியமுடிகிறது. 

கிளிநொச்சியில், மாகாண மேல் நீதிமன்றத்தை உள்ளடக்கிய புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று  (03) நடைபெற்றது. 

இந்நிகழ்வில், பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல ஆகியோர் பிரதம அதிதிகளாகப் பங்கேற்று அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வுகள், கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஒழுங்கமைப்பின் அடிப்படையிலேயே இடம்பெறும் என இருந்தது.

இந்த நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் நீதி அமைச்சரின் அழைப்பின் பேரில் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் வருகையடுத்து, நீதி அமைச்சின் திடீர் தலையீட்டால், நிகழ்வு ஒழுங்குகள் மாற்றியமைக்கப்பட்டன.

அதாவது, மங்கல விளக்கேற்றல் நிகழ்வு ஒழுங்கில், மூத்த தமிழ் நீதிபதியான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் பெயரை நீக்கிவிட்டு, அவரது இடத்துக்கு விஜயகலா மகேஸ்வரனை மங்கல விளக்கேற்றலுக்கு நீதி அமைச்சு அதிகாரிகள் அழைத்தனர்.

அத்துடன், அடிக்கல் நாட்டும் நிகழ்வு நிறைவடைந்ததும், உரையாற்றுவோர் ஒழுங்கில், கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணித் தலைவரை நீக்கிவிட்டு, அவரது இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் பெயரை நீதி அமைச்சின் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுவாராயின், நிகழ்விலிருந்து வெளியேறுவோமென, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்யுசிங்கத்திடம் எடுத்துரைத்தனர்.

இதையடுத்து, சட்டத்தரணிகள் சங்கத் தலைவி, இந்த விடயத்தை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரலயிடம் எடுத்துக் கூறியதைத்தொடர்ந்து,  சட்டத்தரணிகளின் இந்த வெளிப்பாடை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்ட நீதி அமைச்சர், “இனி இப்படியான நிகழ்வு வடக்கு - கிழக்கில் நடைபெறாதுதானே” என்று, பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் பெயரை உரையாற்றுவோர் ஒழுங்கிலிருந்து நீக்குமாறு, அதிகாரிகளை அமைச்சர் பணித்தார்.

அமைச்சரின் பொறுப்பற்ற பதிலில் அதிருப்தியடைந்த சட்டத்தரணிகள், நிகழ்விலிருந்து வெளியேற முடிவெடுத்த போதும், நிகழ்வில் பிரதம நீதியரசர் பங்கேற்றிருப்பதால், அவருக்கு மதிப்பளித்து நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்க எடுத்த முடிவைக் கைவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .