2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘இனவாதத் தேரர்களை கட்டுப்படுத்துங்கள்’

Niroshini   / 2017 மே 20 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

“இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து, தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை நேற்று காலை (19) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பௌத்த மத குருமார்களில் ஒரு சிலர் ஜனாதிபதி போலவும் பிரதமர் போலவும் பாதுகாப்பு அமைச்சுப் போலவும் செயற்பட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி அவர்கள் சட்டத்தை மதிப்பதாகவுமில்லை. இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது இந்த நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இனவாதத்தை வளர்த்து அதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென்ற ஒரு சதியின் பின்னணியிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் நல்ல தன்மையினை இவர்கள் தமது நடவடிக்கைக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

30 ஆண்டுகால யுத்தத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியாக  வாழும் இனங்களுக்கிடையிலே மீண்டும் குரோதத்தை தோற்றுவித்து, இந்த நாட்டில் இரத்த ஆற்றினை மீண்டும்  ஓடச்செய்து நாட்டை குட்டிச்சுவராக்க ஒரு சிறு கூட்டம் நினைக்கின்றது. வெளிநாடுகளில் கையேந்தும் நாடாக இலங்கையை ஆக்கவேண்டும் என்பதுவும் இவர்களின் இலக்கு. இவர்களின் செயற்பாடு நாளுக்குநாள் மொசமாக இருக்கின்றது. இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கக்கூடாது. இன்று காலை கூட ஜனாதிபதியை தொடர்பு கொண்டு இதனை தெளிவாக தெரிவித்தேன்.

நமது நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும்  கட்டியெழுப்பப்படவேண்டும். என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் பிரதமரினது அர்ப்பணிப்புகளை நான் நினைத்துப்பார்க்கின்றேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட கிடைத்த சந்தர்ப்பத்தை நாட்டு நலனுக்காக அவர் விட்டுக்கொடுத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் மேற்கொண்ட அவருடைய தியாகம் போற்றப்படவேண்டியது” என்றார்.

“யுத்த காலத்தில் உயிரையும் துச்சமென கருதி பணியாற்றிய அதிகாரிகளை நான் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றார்கள். அத்துடன், மன்னார் கச்சேரியில் மூவினங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பாக பணிபுரிவது எமக்கு பெருமை தருகிறது. தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமின்றி  மூன்று சமூகங்களும் மன்னாரில் வாழும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், அரசியல் இருப்புக்காக இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படுபவர்கள் மக்களின் நலன் கருதி தமது நடவடிக்கைகளை கைவிட  வேண்டும்.

சிறுபான்மை  மக்கள் நிம்மதி இழந்து தவிக்கினறனர். காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் சுமார் 89நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டம் நடத்துகின்றனர். இன்று காலை அமைச்சர் சாகலவும் நானும் அந்த இடத்திற்கு சென்றோம். அத்துடன் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கும் பிரதமர் ஜனாதிபதியுடன் இணைந்து தீர்வு காண்பார் என நம்புகின்றேன்.

அத்துடன், பிரதமரின் 10 இலட்சம் பேருக்கான வேலை வழங்கும் திட்டத்தில் அமைச்சர்களாகிய எங்களது பங்களிப்பு வெகுவாக இருக்கும் என உறுதி கூறுகின்றேன்.

மன்னார் மாவட்டத்திலே சிலாபத்துறை, முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்விடங்கள் கடற்படையினராலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அந்த மக்களிடம் கையளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X