2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையினரின் கெடுபிடியால் மீனவர்கள் பாதிப்பு

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (20) காலை, கடற்தொழிலுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பிய படகு ஒன்றை கடற்கரையில் இடை மறித்த கடற்படையினர், தேவையற்ற காரணங்களை கூறி, தாமதிக்க வைத்தமையினால் தாம் பிடித்த பெறுமதியான மீன்களை, விற்பனை செய்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பள்ளிமுனை கிராம மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த மீனவர் தெரிவிக்கையில்,

“மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து செவ்வாய்க்கிழமை(20) காலை 5 மணியளவில், படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றோம். இதன் போது, வேறு படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.

எமது வலைகளில் பிடிபட்ட மீன்களை, படகில் ஏற்றி சந்தையில் விற்பதற்காக பள்ளிமுனை பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள கடற்படை சோதiனைச்சாவடிக்கு முன்னால் காலை 9.30 மணியளவில் வந்தோம்.

இதன் போது, எமது படகை தடுத்து வைத்த கடற்படையினர், எமது படகில் உள்ள மீன்கள் 'டைனமெற் வெடி பொருள்' மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் எனவும்,அவற்றை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

எனினும், குறித்த மீன்கள் உயிருடன் காணப்படுவதுடன், அவை வலையின் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் என தெரிவித்ததோடு, குறித்த மீன்களை உரிய நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்லாவிட்டால் அவற்றை விற்பனை செய்ய முடியாது என கடற்படையினரிடம் தெரிவித்த போதும் கடற்படையினர் எமது மீன்களை விடுவிக்கவில்லை.

இந்த நிலையில், கடற்படை அதிகாரி ஒருவரும் பின்னர், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

படகில் காணப்பட்ட  மீன்களை எடுத்து கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் பரிசோதித்து பார்த்த பின், குறித்த மீன்கள் 'டைனமெற் வெடி பொருள்' மூலம் பிடிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதனையடுத்து, மீன்களை கொண்டு செல்லுமாறு கடற்படையினர், எம்மிடம் தெரிவித்தனர். எனினும், தாமதம் காரணமாக மீன்களை  பாதி விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய  நிலை ஏற்பட்டது” என்றார்.

அத்துடன், “குறித்த படகில் தொழிலுக்குச்சென்ற 5 மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக பள்ளிமுனை மீனவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

டைனமெற் வெடிபொருள் மூலம் மீன் பிடிக்கின்றார்கள் என கூறி, சாதாரணமாக வலை மூலம் மீன் பிடிக்கின்ற மீனவர்களின் மீன்களையும் தடுத்து வைத்து, மீனவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை கடற்படையினர் தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகின்றனர்” என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .