2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கட்டளைத் தளபதிக்கு நீதவான் எச்சரிக்கை

George   / 2016 மே 19 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, அடுத்த வழக்குத் தவணையில் மன்றுக்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பிடியாணை பிறப்பிக்கப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன், வியாழக்கிழமை (19) உத்தரவிட்டார்.

இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, வியாழக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி மற்றும் இறுதி யுத்தத்தின் போது 58ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விவரம் பதிவு செய்யப்பட்ட பட்டியலை சமர்ப்பிப்பதாக உறுதியளித்த சாணக்க குணவர்த்தன ஆகியோர் இன்று மன்றுக்குச் சமூகமளிக்கவில்லை.

அரச தரப்புச் சட்டத்தரணி வெளிநாடு சென்றிருப்பதால் சமூகமளிக்கவில்லையெனவும் கட்டளைத் தளபதி, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அங்கு சென்றிருப்பதால் இங்கு சமூகமளிக்கவில்லையெனவும் அரச சட்டத்தரணிக்கு பதிலாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்,'மனுதாரர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வெகுதூரத்தில் இருந்து பஸ்களில் பயணம் செய்து, வழக்குத் தவணைக்கு வருகின்றனர். ஆனால், சகல வசதிகளும் இருந்தும், எதிரி தரப்பினர் மன்றில் ஆஜராகமல் இருக்கின்றனர்' எனக்கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், அடுத்த வழக்குத் தவணையில் கட்டளைத் தளபதி கட்டாயம் மன்றுக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும், அதன்போது சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை கொண்டு வரவேண்டும் எனவும் கூறியதுடன், மன்றுக்குச் சமூகமளிக்கத் தவறின் கட்டளைத் தளபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றார்.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளை, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணை செய்யுமாறு வவுனியா மேல்நீதிமன்றம் கூறியதுக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் இந்த சரணடைவு சம்பவம் இடம்பெற்றமையால் நியாயாதிக்க அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மனுத் தாக்கல் செய்தவர்கள் தங்கள் உறவுகளை 58ஆவது படைப்பிரிவு இராணுவத்திடம் ஒப்படைத்ததாக கூறியிருந்த நிலையில், அந்தப் படைப்பிரிவின் பிரிகேடியர், கடந்த வழக்குத் தவணiயின் போது, மன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, சரணடைந்தவர்களின் பெயர் விவரங்கள் பதிவு செய்து தாங்கள் உள்ளெடுத்ததாகவும், மனுத்தாக்கல் செய்துள்ள காணாமற்போன ஐவரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இல்லையென கூறினார்.

இதனையடுத்து, மேற்படி பட்டியலை மன்றில் சமர்;ப்பிக்குமாறு கடந்த வழக்குத் தவணையில் நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .