2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீன்பிடி உரிமையை சிங்களவர்களுக்கு தாரைவார்க்க சதி: ரவிகரன்

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவின் மீன்பிடி உரிமைக்கு சிங்கள மீனவ சமூகமே உரித்துடையவர்கள் என முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்தை, வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் சவாலுக்கு உட்படுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடித் தொழிலை ஒட்டுமொத்தமாக தமிழர்களிடம் இருந்து பறித்து, தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களிடம் ஒப்படைப்பதற்காக, இராணுவம் மற்றும் கடற்படையினரைக் கொண்டு அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.  

கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற வடமாகாணசபை அமர்வில், முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே துரைராசா ரவிகரன், மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழில் தொடர்பில், கடந்த ஜூன் முதலாம் திகதியன்று, மத்திய கடற்றொழில் அமைச்சில் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசாங்க அதிபர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மீன்பிடி உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே,  முல்லைத்தீவு கரை வலைப்பாடுகளின் உரிமையாளர்களாக, சிங்களவர்களே இருந்தார்கள் எனவும் இவர்களிடம் கூலித்தொழிலாளர்களாக தமிழ் மீனவர்கள் தொழில் செய்தார்கள் எனவும் கட்டளைத் தளபதி தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக, 1965ஆம் ஆண்டு கரைவலைப்பாடுகள் தொடர்பான வர்த்தமானியையும் அவர் முன்வைத்துள்ளார்.

1965ஆம் ஆண்டு வர்த்தமானி என்னிடமும் உண்டு. கொக்கிளாய் தொடக்கம் வெள்ளாமுள்ளிவாய்க்கால் வரையான 44 கரவலைப்பாடுகள், அப்போது நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இவற்றில், உள்ளூர் சிறு தொழிலாளர்களுக்காக கள்ளப்பட்டில் நான்கு பாடுகளும், செம்மலையில் இரண்டு பாடுகளுமாக ஆறு பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மிகுதி 38 பாடுகளை, 56பேர் வழங்கியுள்ளார்கள். இந்த 8பேரும் தமிழர்களாவர்.

இவ்வாறு நிலைமை இருக்க, பொய்யான தகவலை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத்தளபதியையும் கடற்படை அதிகாரியையும், முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடி பிரச்சினைகள் ஆராயும் குழுவில் இணைத்துள்ளார்கள். கட்டளைத் தளபதி இவ்வாறு பொய் கூறியதற்கும் குறித்த குழுவிலிருந்து இராணுவ தளபதியை அகற்றுவதற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ரவிகரன் தனது பிரேரணையை முன்மொழிந்தார்.

இந்த பிரேரணையை வழிமொழிந்த உறுப்பினர் சர்வேஸ்வரன், சிவில் சமூகத்தில் இராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்ற கோரிக்கையும் இதில் இணைக்க வேண்டும் எனக் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X