2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் கடந்த 10 மாதத்தில் 46 பெண்கள் மீதான வன்முறைகள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
 
வவுனியா மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரையில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் 46 பற்றி சில பெண்கள் அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு தெரிவித்துள்ளது. 
 
வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவற்றில் 6 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகமாகவும், 16 முறைப்பாடுகள் பாலியல் வல்லுறவுகளாகவும், 24 முறைப்பாடுகள் சிறுமிகள் மீதான வல்லுறவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை மட்டக்களப்பில் 37 முறைப்பாடுகளும், அம்பாறை மாவட்டத்தில் 19 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 49 முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் 10 முறைப்பாடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 முறைப்பாடுகளும், யாழ். மாவட்டத்தில் 44 முறைப்பாடுகளும் சில பெண்கள் அமைப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பெண்கள் மீதான வன்முறைகளை கட்டப்படுத்துவதற்கு இலங்கையின் எந்த இடமானாலும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றவுடன் துரிதமாக விசாரணைகள் இடம்பெற்று சாட்சிகள் சேகரிக்கப்பட வேண்டும். சந்தேக நபர்களுக்கு 14 நாள்கள் தடுப்பு காவல் வழங்கப்பட்டு பின்னர் சாட்சிகள் போதவில்லையென தள்ளுபடி செய்வதை தடுத்தல் வேண்டும். சட்டவைத்திய பகுப்பாய்விற்காக அனுப்பப்படும் தடயங்கள் துரிதமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு சரியான முடிவுகளையும் அறிக்கைகளையும் உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வன்முறைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கும் மற்றும் குடும்பத்தவர்களுக்கும் வைத்திய அதிகாரிகள் அனுப்பிவைத்தல் வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும். 1995, 1999ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, பெண்கள் - சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான தண்டனைச் சட்டக்கோவையை அமுல்படுத்தல் வேண்டும். பொறுப்புமிக்க நீதித்துறையினரே, அதிகாரிகளே, உண்மையான நீதிக்காகவும், மனித நேயத்திற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து ஆதரவு வழங்கி சமூகத்தில் இவ்வாறான வன்முறைகள் அதிகரிக்கா வண்ணம் இருப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பிரிவு பலப்படுத்துவதும், அங்கே தமிழ் பேசும் பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தலை உறுதிப்படுத்தல், சமூகத்திலுள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் இணைந்து சம்பந்தப்பட்ட சட்டத்துறை, வைத்தியத்துறை, பாதுகாப்புத்துறை, அரச, அரச சார்பற்ற துறைகளுக்கு அழுத்தம் கொடுத்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயல்வாதப் பயணங்களைத் தொடரவேண்டும் என்ற பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--