2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே நிவாரண கிராமங்களில் உள்ளனர். அவர்களுடைய மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படவேண்டும் என பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, நிவாரண கிராமத்திலிருந்து மீளக்குடியேறிய மக்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளிடமிருந்து விளக்கமாக கேட்டறிந்து கொண்டதுடன் அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், விவசாயம், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், நீ;ர்பாசனம் மற்றும் வீதிகள், போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதேவேளை, பெரும்போக விவசாய செய்கையில் மக்கள் ஈடுபட தம்மை தயார்படுத்திவருகின்றனர்  குறிப்பாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள மக்களும் விவசாய செய்கையில் ஈடுபட ஆர்வம் காட்டியுள்ளனர் எனவும் அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பந்துலகுண வர்த்தன, மில்றோய் பெர்னாண்டோ மற்றும் மாவட்ட சகல திணைக்கள தலைவர்களும் இந்த கலந்துரையாடலின்போது கலந்துகொண்டனர்.

மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும் என அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ குறிப்பிட்டதுடன் மீளக்குடியேறிய மக்களுக்கு மானிய உதவி திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் வீடுகளை அமைக்கவும் விவசாய நடவடிக்கைளுக்கும் இந்த உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள கட்டிடப் பொருட்களும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--