2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இயக்கச்சி சந்தையை மீள இயக்கும்படி மக்கள் அமைப்புகள் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 11 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கண்டி – யாழ்ப்பாணத்துக்கிடையிலான ஏ – 9 பிரதான வீதிக்கருகில் அமைந்திருந்த இயக்கச்சி சந்தையை மீண்டும் இயக்கும்படி அந்தப் பகுதி மக்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த இந்தச் சந்தை போரினால் முற்றாகவே அழிந்தது. இப்போது இயக்கச்சியில் மக்கள் மீண்டும் மீளக் குடியேறியுள்ள நிலையில் அவர்களின் தேவைகளை நிவர்த்திக்கும் பொருட்டு இந்தப் பொதுச் சந்தையை மீள ஆரம்பிக்கும் படி அந்தப் பகுதியின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சந்தைக்கான தற்காலிகக் கொட்டகையை நிர்மாணித்து உடனடியாகச் சந்தையை ஆரம்பிக்கும் படியும் பின்னர் அதனுடைய கட்டுமானப் பணிகளைச் செய்து தரும்படியும் இந்தப் பொது அமைப்புகள் பச்சிலைப்பள்ளி - பளைப் பிரதேச செயலர் மற்றும் பளைப் பிரதேச சபைச் செயலாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளன.

அத்துடன் சந்தைப் பகுதியில் அமைந்திருந்த முள்ளிப்பற்றுப் பிரதேச சபைக்குரிய கடைத்தொகுதியினை மீள அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்த அமைப்புகள் தமது கோரிக்கையில் கேட்டுள்ளன.  இதேவேளை இந்தப் பகுதில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியில் படையினர் சிற்றுண்டிச்சாலைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சந்தை மீளவும் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் இயக்கச்சி, கொற்றாண்டார்குளம், கோவில்வயல், முகாவில், சங்கத்தார்வயல், பனிக்கையடி, ஊர்வணிகன் பற்று, வை.எம்.சி.ஏ வீடமைப்புத்திட்டம், தென்னிந்திய திருச்சபை வீடமைப்புத்திட்டம், பேராலை, மாசார் ஆகிய பகுதி மக்கள் பளை அல்லது கிளிநொச்சிப் பகுதிச் சந்தைகளுக்கே செல்லவேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .