2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வடக்கின் வசந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மின்வழங்கலைத் துரிதப்படுத்த கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (நவரத்தினம்)

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான மின்சாரம் வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு அரசின் பாகுபாடான செயற்பாடுகளே காரணமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யுத்தத்தின் பின்னரான வடக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தினால் வடக்கில் மின்சாரம் வழங்கும் செயற்பாடுகள் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்படாமைக்கு மின்னுபகரணக் கொள்வனவில் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தப்படி பணம் செலுத்தாமையே காரணமெனத் தெரியவந்துள்ளது.

இக்காலப்பகுதியில் வடக்கில் மட்டும் வீதியோரக் குறைவழுத்த மின்கம்பிகள் இதுவரை 900 கிலோமீற்றர் வரையே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் 1,100 கிலோமீற்றர் மின்கம்பிகள் இடுவது ஏற்கனவே திட்டமிட்டபடி இடம்பெறாது இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தூண்கள் நிறுவப்பட்டுள்ள 250 கிலோமீற்றர் தூரத்திற்குரிய குறைவழுத்த மின்கம்பிகள் இதுவரை கிடைக்காததால் இணைப்பு வேலைகள் இலங்கை மின்சாரசபையினால் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனைவிட மீள்குடியேற்றக் கிராமங்களிற்கென மேலதிகமாக 1,500 கிலோமீற்றர் வரை இன்னமும் மின்பம்கிகள் பொருத்தப்பட வேண்டியுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன.  மின்னிணைப்பு உபகரணங்களான காவலிகள், கடத்திகள், போல்ட் மற்றும் நட்டுகள், 33 கிலோவாற் மின்கம்பிகள், தூண்களுக்கான கம்பிபார்கள், குறுக்குச் சட்டங்கள் மற்றும் எல்.ரி 240 ஏரியல் பண்டிள் கேபிள்கள் உட்பட இதர பொருத்துப் பொருட்களும் இதுவரை சீன நிறுவனத்தால் வழங்கப்படாதுள்ளன.

காலங்காலமாக இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்துவரப்பட்ட காவலிகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டன. கொம்பிளான்ற் என்னும் சீன நிறுவனம் ஒன்றுடன் கடன் அடிப்படையிலேயே அரசு இப்பொருட்களைக் கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு அந்நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும்.

இதனடிப்படையில் சீன அரசு கட்டம் கட்டமாக அந்நிறுவனத்திற்கு நிதியினை வழங்கும். இந்த கொம்பிளான்ற் நிறுவனம் இந்தியாவில் ஏரியல் பண்டில் கேபிளையும் மலேசியாவில் பொருத்து உபகரணங்களையும் இந்தியாவிலிருந்து காவலிகளையும் கொள்முதல் செய்வதுடன், இலங்கையிலிருந்து தூண்கள், கம்பிபார்கள் மற்றும் குறுக்குச் சட்டங்களைப் பெற்று அதனை எமது நாட்டிற்கே விநியோகிப்பதுதான் ஒப்பந்த உடன்படிக்கை. எனினும் சீன அரசாங்கம் பணத்தினை அந்நிறுவனத்திற்குச் செலுத்தாததால் மின்னுபகரணங்கள் வழங்கலை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இப்பொருட்கள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டுத் தரத்திற்கு நிகராகத் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்தியாவிடமிருந்து வடக்கின் வசந்தம் மின் வழங்கல் திட்டம் தொடங்கியது முதல் 2009 ஜூன் மாதத்திலிருந்து 2010 நடுப்பகுதிவரை ஒப்பந்த அடிப்படையில் காவலிகளை மட்டும் பெற்று எமக் விநியோகித்தன. இதனைவிட இலங்கையிலேயே 'ஏ சி எல்' என்னும் நிறுவனம் இங்கிலாந்து தரத்திலான மேற்குறித்த பொருட்களைத் தரவல்ல நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலு மற்றும் மின்சக்தி அமைச்சு வடக்கின் வசந்தம் திட்டமூடாக 667 மில்லியன் ரூபாய் பெறுமான வேலையாட்களுக்கான கூலி உட்பட 5,297 மில்லியன் ரூபாய்க்கான மின்னுபகரணங்கள், பொருத்தி முதலான பொருட்களை வழங்க ஒப்புக்கொண்டிருந்தும் வடக்கின் மின்னிணைப்பு வேலைகள் அதற்கான பொருட்கள் வழங்கப்படாததால் நிறுத்தப்பட்டுள்ளதானது மரமேறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததுபோல் எமது மீள்குடியேற்ற மக்களையும் ஏனையோரையும் வாட்டி வதைத்துள்ளது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி, மீள்கட்டுமானங்களுக்கு உலக வங்கியால் ஒதுக்கப்பட்ட தொகையான 1,569 மில்லியன் ரூபாவில் இதுவரை இவ்வாண்டிற்கென உபயோகிக்கப்பட்ட 376 மில்லியன் ரூபாய் போக பெருந்தொகை மிகுதிப்பணம் திரும்பிச் செல்லும் அபாயம் உள்ளதோடு அடுத்த ஆண்டிற்கென எத்தகைய அபிவிருத்திக் கொடுப்பனவும் உலக வங்கியினால் வழங்கப்படாத நிலை தோன்றியுள்ளதுடன், வடக்கிற்கான மின்வழங்கலில் கொள்வனவிற்கே பணம் இல்லை என்கின்ற அவல நிலையும் அரசாலும் அதன் நிர்வாக மட்டத்தாலும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு இப்பிரதேசம் அபிவிருத்திக்குட்படாமல் பார்த்துக்கொள்வதே

அரசின் நிரந்தரக் கொள்கையாக நிலைகொண்டுள்ளதா? என எமது மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள்.
சாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு மின்சாரத்திற்காக மாதக்கணக்கில் தவம் கிடக்கும் மக்களையும் வீதிக்கு மின்சாரம் வந்துவிட்டது. எப்பொழுது வீட்டிற்கு வரும் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கும் மக்களையும் இனியும் ஏமாற்றாமல் உரிய நடவடிக்கை எடுத்து மின்சாரம் வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .