2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கமாட்டோம்: கிளி.தளபதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரொமேஸ் மதுசங்க)

'இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 109பேருக்கும் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் அவர்களுக்கான இராணுவ பயிற்சி கட்டாயம் வழங்கப்படும்' என்று கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

'இதேவேளை, இராணுவத்துக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக்கொண்டமையை தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேச ரீதியில் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றன' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இராணுவத்துக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று சனிக்கிழமை கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

செட்டிக்குளம் நலன்புரி முகாமில் தங்கியிருந்த நிலையில் பரந்தன், நாச்சிக்குடா, பாரதிபுரம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் மீள்குடியேறிய யுவதிகளில் சிலரே இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்படி 109 யுவதிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் யுவதிகளின் பெற்றோர், தங்களது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

'பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்த மேற்படி யுவதிகளுடனான சந்திப்பினை அடுத்தே அவர்களுக்கு இராணுவத்திலேனும் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க தீர்மானித்தேன்.

இதற்கமைய தற்போது இராணுவத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு அதற்கேற்றவகையில் அவர்களில் சிலரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

இராணுவ சேவையில் ஈடுபடவுள்ள இந்த யுவதிகளுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும். மேலதிக கொடுப்பனவுகளுடன் சேர்த்து அவர்கள் மாதாந்தம் சுமார் 50ஆயிரம் ரூபாவினை சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சில வதந்திகள் நிலவுகின்றன. இராணுவத்தின் 105 பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒரேயொரு பிரிவு மாத்திரமே ஆயுதப் பயிற்சிபெற்ற பிரிவாக காணப்படுகின்றது.

இராணுவத்தின் தொழிற்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள இவர்கள், இராணுவ மகளிர் படையின் 6ஆவது படையணியின் கீழ் தொழிற்படவுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் இராணுவ பயிற்சிகள் கட்டாயம் வழங்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .