2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'பிக்பொக்கட்' விவகாரம்: வவுனியா நீதவானை ஆஜராகுமாறு உத்தரவு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 14 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவானின் மணிபர்ஸை 'பிக்பொக்கட்' அடித்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரையும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவுக்கு பணித்துள்ளது.

கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 03 ஆம் திகதி வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் மணிபர்ஸை 'பிக்பொக்கட்' அடித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பிலான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் கனிஷ்க விஜயரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 03 ஆம் திகதி காலை வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின்  மணிபர்ஸை பிக்பொக்கட் அடித்ததாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் உட்பட இருவரை பொலிஸார் அன்றைய தினமே சந்தேகத்தின்பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கொழும்பில் அன்றையதினம் நடைபெற்ற கூட்டத்திற்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் வருகை தந்தபோதே நீதவானின் மணிபர்ஸ் பிக்பொக்கட் அடிக்கப்பட்டது.

தனது மணிபர்ஸ் காணாமல் போனமை தொடர்பில் நீதவான் உடனடியாக அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர்.

'பிக்பொக்கட்' அடிக்கப்பட்ட மணிபர்ஸில் இருந்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போதே பொலிஸார் அவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

நீதவானின் மணிபர்ஸில் அவுஸ்திரேலிய டொலர்கள் 50 மற்றும் அமெரிக்க டொலர் ஒன்றும் இருந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தான் மணிபர்ஸை 'பிக்பொக்கட்' அடிக்கவில்லை என்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதற்காகவே சந்தேகநபருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்ததாக இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்த பதில் நீதவான் சந்தேக நபர்கள் இருவரையும் டிசம்பர்  14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அவ்விருவரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .