2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆயுதப் போராட்ட வரலாற்று கொச்சைப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது: பாஸ்கரா

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொயுசேரியன் லெம்பேட், நவரத்தனிம் கபில்நாத்


ஜனநாயக போராட்டத்திற்கு திரும்பி விட்டோம் என்று நினைந்து ஆயுதப் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா தெரிவித்தார்.

இன்றைய நாள் தமிழர் மனதில் என்றும் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாளாகும். உலகில் என்றும் நடைபெற்றிருக்காத சிறைச் சித்திரைவதை கொலைகளும் இன அழிப்பும் சொத்தழிப்புகளும் தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட மிக கொடூரமான ஓர் கரிநாளாகும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய வீரர்கள் தினம் கடந்த சனிக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா,

"யூலை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடுவோரும் ஆண்டு விழாக்களை கொண்டாடுவோரும் கூட அந்த நாட்களை சில நேரம் மறந்துவிடலாம். ஆனால் உலகில் வாழும் தன்மானத் தமிழர்கள் எவரும் யூலை மாதக் கலவரத்தையும் சிறை படுகொலைகளையும் என்றும் மறக்கமாட்டார்கள். அப்படி மறப்பவர்களாய் இருந்தால் அவர்கள் தமிழராக இருக்கமாட்டார்கள்.

இந்த வரிசையில் வரலாறு படைத்த தோழர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் மற்றும் கொல்லப்பட்ட அனைத்து தோழர்களும் இன்று தமிழர் வரலாற்று சின்னங்களாக  திகழ்கின்றார்கள். அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.

தமிழினத்தை பொறுத்தவரை இன்றைய தீர்மானக்கரமான காலகட்டத்தில் இப்படியான ஒரு நினைவு கூரல் நிகழ்வு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். தமிழர் போராட்ட வரலாற்றில் தமிழர் விடிவிற்காக  மண்ணுடன் மண்ணாகிய எமது போராட்ட வீரர்களை என்றும் மறக்க முடியாது.

முதல் 30 வருட அகிம்சைப் போராட்டமும் அடுத்த முப்பது வருட ஆயுதப் போராட்டமும்  தற்போது மீண்டும் ஒரு புதுவடிவில் அறவழி ஜனநாயக போராட்டம் என வரலாறு நடைபோட்டு கொண்டிருக்கின்றது. இன்று மீண்டும் ஜனநாயக போராட்டத்திற்கு திரும்பி விட்டோம் என்று நினைந்து ஆயுதப் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்துவதை நாம்  ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது கட்சி ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை.

ஆனால் ஆயுதம் தூக்க தள்ளப்பட்ட வரலாற்றையும் அதில் வரலாறு படைத்த மாவீரர்களின் தியாகங்களையும் நாம் வணங்குகிறோம். இதைப் பலமுறை தெளிவாகவும் விபரமாகவும் எமது தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சில வரலாற்றுத் தவறுகள அறவழி போராட்டத்திலும் மறவழி போராட்டத்திலும்; நடைபெற்றதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது உலக போராட்ட வரலாற்றில் எங்கும் இடம்பெற்றுள்ளது. ஆனால் போராட்டம் கொச்சப்படுத்த முடியாது. எமக்காக உயிர் நீத்தவர்களை நினைத்துப் பார்க்கப்படுவதுடன் நினைவு கூரப்படவும் வேண்டும்.

இந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒரு காலகட்டமாகும். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட  ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு  நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேல வழியில் அறவழி அரசியலுக்கு பிரவேசித்து அரசியல் நடத்துவதை  நாம் புறக்கணித்துவிட முடியாது.

அவர்களுக்கு உரித்தான உரிய சம அங்கீகாரங்கள்  கொடுக்கப்பட வேண்டும். இன்றைய வரலாற்றை நேற்றைய அறவழி மறவழி வரலாறுகள் இரண்டும் ஒருசேர  வழிநடத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் மட்டுமன்றி கொழும்பு, மலையகம் என உலகம் முழுக்க வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எமது ஜனநாக மக்கள் முண்ணனியிண் அரசியல் குழுக் கூட்டம் கடந்த 16ஆம் திகதி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடந்தபோது எடுக்கப்பட்ட பல தீர்மானங்களில் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய வெற்றிக்கு ஒத்துழைப்பது என்பதும் ஒன்றாகும்" என்றார்.

1983ஆம் ஆண்டு யூலை கலவரத்தில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட டெலோ என அழைக்கப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட போராளிகள் மற்றும் பொதுமக்கள் 53 பேரின் 30 ஆவது நினைவு தினத்தை அஞ்சலிகளும் இதன்போது இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், புளோட் தலைவர் த.சித்தார்த்தன் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.'




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .