2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கு மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும்: வடமாகாண சுகாதார அமைச்சர்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபிலநாத்

வடமாகாணத்தின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டமிடலின்போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசம் மற்றும் பாலமோட்டை பகுதிகள் கடந்தகால யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. அத்துடன் சுகாதாரம் உட்பட ஏனைய அடிப்படைத்தேவைகள் உடனடியாக பூர்த்திசெய்யவேண்டியுள்ளன.

எனவே, மக்களுக்கான சுகாதார அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலானது அவசர, இடைக்கால மற்றும் நீண்ட கால நோக்கில்; மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். இதன்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

இதன் போது அப் பகுதி மக்கள் அமைச்சரிடம் தமது பிரதேச சுகாதார நிலைமைகள் தொடர்பில் எடுத்துக்கூறும்பேது,

தங்களுடைய பிரதேசத்தில் வைத்தியசாலை வசதிகள் இல்லையெனவும் இதற்காக 25 கி.மீ ற்கு அப்பாலுள்ள ஓமந்தை வைத்தியசாலைக்கே செல்லவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் தமக்கு போக்குவரத்து வசதிகள் குறைவாக காணப்படுவதால் தங்கள் பகுதியில் வைத்தியசாலை வசதிகள் ஏற்படத்தப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை தமது பிரதேசத்திலுள்ள குஞ்சுக்குளம் பாடசாலை அதிபர் இல்லாமல் பலகாலமாக இயங்குவதாகவும் உடனடியாக அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது தங்கள் பகுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடமாடும் வைத்திய சேவையில் தொண்டர்களாக பலவருடங்கள் பணியாற்றி இளைஞர் யுவதிகள் தற்போது வேலைவாய்பின்றி இருப்பதாகவும் எதிர்காலத்தில் சுகாதாரதுறையில் நியமனங்கள் வழங்கப்படும்போது தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது  கருத்துதெரிவித்த சுகாதார அமைச்சர், இவைதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பகுதியில் வைத்தியசாலைக்கான தேவையுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கான நடவடிக்கை  மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--