2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பொன்தீவுகண்டல் காணி; இரு சமூகங்களுக்கும் உரியதென அறிவிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், நானாட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பொன்தீவுகண்டல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் மற்றும் பொன்தீவுகண்டல் கிராமங்களுக்கிடையில் காணப்படுகின்ற காணியானது அரச காணியாகும். எனவே இது தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தவர்களுக்கும் உரியது. அதனால், இக்காணியில் இந்திய வீட்டுத்திட்டத்தினை துரிதப்படுத்துவதென முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது' என்று நானாட்டான் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
  
மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பொன்தீவுகண்டல் கிராம அலுவலர் பிரிவில் மீள் குடியேற்றத்திற்கான காணி பகிர்ந்தளித்தலில் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் சி.சந்திரையா அறிக்கை ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொன்தீவு கண்டல் கிராம அலுவலர் பிரிவிலடங்கும் பொன்தீவுகண்டல், பூவரசங்குளம் கிராமங்களில், பூவரசங்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று மீளவும் 2009ஆம் ஆண்டு குடும்ப எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்த மக்களாக மீளக்குடியமர்ந்த வேளை, குடியிருப்பிற்கு காணி போதாமையாகக் கருதி 09.12.2009ஆம் ஆண்டு பள்ளிவாசல் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக தமது கிராமத்திற்கும் பொன்தீவுகண்டல் கிராமத்திற்கும் இடையில் காணப்படும் அரச காணியைக் கோரி விண்ணப்பித்தார்கள்.

பல வருடங்களாக இடம் பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர வரும்வேளை, மீள்குடியேற்றம் தொடர்பான அரசாங்க கொள்கைகளுக்கமைய காணியற்றோருக்கு காணி மற்றும் வீட்டு வசதிகள் உட்பட வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஒவ்வொரு பிரதேச செயலாளரினதும் கடமையாகவும் உள்ளபடியினால், குறித்த இக்காணி பற்றி ஆராய்ந்த போது இக்காணியானது இரு கிராமத்திற்கும் பொதுவான அரச காணியாக இருந்தபடியால் இரு தரப்பினரிடமிருந்தும் (பூவரசங்குளம், பொன்தீவு கண்டல் மக்களிடமிருந்தும்) விண்ணப்பங்கள் கோரப்பட்டு, காணிக்கச்சேரிக்கு தகுதியான இஸ்லாமிய குடும்பங்கள் 55ம், தமிழ் குடும்பங்கள் 36ம் ஆக இனங்கண்டு அதற்கான முறையான அனுமதியும் பெற்று, சமகாலத்தில் ஏறக்குறைய ஆறு மாத காலங்களாக குறித்த காணியில் காணப்பட்ட காடுகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் மேடு பள்ளங்களாக காணப்பட்ட காணிகளும் சீர் செய்யப்பட்டு காணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

 
இதன் ஆரம்ப முயற்சியாக இவ்வரச காணியில் 4½ ஏக்கர் நிலமானது மூன்று மதத்தினருக்கும் சேமக்காலை, சுடுகாடு அமைப்பதற்கு வழங்கும் பொருட்டு, மும்மத பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டு, அக்கலந்துரையாடலின் போதும் இக்காணி பகிர்ந்தளித்தல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டவேளை அவர்களின் பூரண இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது.மேலும் சேமக்காலை மற்றும் சுடுகாட்டுக்கென எம்மால் ஒதுக்கப்பட்ட காணியானது பொன்தீவு கண்டல் கிராமத்தை நோக்கியே அமைந்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பொன்தீவுகண்டல் கிராம அலுவலர் பிரிவில் வீடுகள்; தேவையுள்ளவர்கள் இனங்காணப்பட்டு ஏற்கனவே நிக்கோட், நியாப்  திட்டங்கள் ஊடாக வீடுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது எமது பிரிவில் நடை முறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வீடமைப்புத்திட்டத்தில், காணிக் கச்சேரி மூலம் தெரிவு செய்யப்பட்ட 55 முஸ்லீம் குடும்பங்களில் 45 குடும்பங்களும், 36 தமிழ் குடும்பங்களில் 04 குடும்பங்களும் பொன்தீவுகண்டல் கிராமத்தில் மேலும் 09 குடும்பங்களும் உள்வாங்கப்பட்டு, இதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் உடனடியாக திட்டத்தை ஆரம்பிக்கும் பொருட்டு காணியானது பயனாளிகளுக்கு (இஸ்லாமிய மக்கள்) கையளிக்கப்பட்டு அதில் வீட்டுக்கான கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 28.10.2013ஆம் திகதி திங்கட்கிழமை பொன்தீவு கண்டல் மக்களால் எமது செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படடதின் விளைவாக அதனையடுத்து உரிய கட்டுமாணப்பணிகள் யாவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இச்செயற்பாடானது இரு சாராருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு, இவ்விடயம் தொடர்பில் எம்மால் இரு கிராம பிரதிநிதிகளையும் அழைத்து கௌரவ நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இருமதத் தலைவர்களுடனும்  08.11.2013ஆம் திகதி காணி பிணக்கு தொடர்பான கலந்துரையாடலானது இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலின் முடிவில், இரு கிராம மக்களையும் தனித்தனியாக சந்தித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதாக முடிவெடுத்து, அவ்வேற்பாடானது 10.11.2013ஆம் திகதி குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்றது. இவ்விணக்கப்பாட்டின் முடிவை தொடர்ந்துவரும் தினங்களில் (13.11.2013) மீண்டும் ஒன்றுகூடி முடிவு எட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் 13.11.2013ஆம் திகதி எமது அலுவலகத்தில் நடைபெறவிருந்த ஒன்றுகூடல் நிகழ்வானது, வடமாகாண முதலமைச்சரும் மற்றும் வமாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து கலந்துரையாடலின் தீர்மானத்தின் பின்னரே இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதிலுள்ள சிரமம் மற்றும் இந்தியன் வீட்டுத்திட்டத்தை முடிவுறுத்தும் நிலை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு மீண்டும் சகல தரப்பினர்களையும் 27.11.2013ஆம் திகதி தொலைபேசி மூலம் அழைத்ததில் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் மட்டும் சமூகமளித்ததை தொடர்ந்து சமூகங்களுக்கான மீள்இணக்கக் குழுவினரோடும் இணைந்து இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
 
இதன் பேரில் இவ்விடயத்தை காலம் தாழ்த்தாது, அன்றைய தினம் மன்னார் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி அவரின் ஆலோசனையின் பிரகாரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் 30.11.2013ஆம் திகதி பிரதேச செயலகத்தில் பொன்தீவுகண்டல் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று இக்காணி பகிர்ந்தளித்தல் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
 
குறித்த காணி அரச காணி என்றும் இப்பகிர்ந்தளிப்பு இரு கிராமத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. மீளக்குடியமர வந்த மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பிரதேச செயலகத்தின் கடமை. அத்தோடு இந்திய வீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் குறித்து தாம் தமது மக்களுக்கு தெரிவித்து பதில் தருவதாக கூறினார்கள். தொடர்ந்தும் ஓர் இணக்கப்பாடு வராத சூழ்நிலையில் மேலும் 04.12.2013ஆம் திகதி அன்று மாலை பொதுமக்கள் சார்பான பிரதிநிதிகள், அளவக்கை கத்தோலிக்க ஆலய பங்குச்சபையும் பொன்தீவுகண்டல் கிராமப் பிரதிநிதிகளுடன் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டும் பொன்தீவுகண்டல் மக்கள் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வராத நிலை காணப்பட்டது. குறித்த காணி அரச காணியாகையாலும் இக்காணி குறித்த பொன்தீவுகண்டல் கிராம அலுவலர் பிரிவில் பூவரசங்குளம் மற்றும் பொன்தீவுகண்டல் கிராமங்களுக்கிடையில் காணப்படுகின்றமையாலும் இக்காணியானது இரு சமூகத்தவர்களுக்கும் உரியதே.
 
எனவே 27.11.2013ஆம் திகதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய காணியினை வழங்கி இந்திய வீட்டுத்திட்டத்தினை துரிதப்படுத்துவதென முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனை ஊடகங்கள் வாயிலாக  தெரியப்படுத்தப்பட வேண்டிய கடமைப்பாடு பிரதேச செயலகத்திற்குண்டு. இறுதியாக சகல நிலையையும் கருத்திற்கொண்டு பின்வரும் தீர்மானத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
 
சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

குறிப்பிட்ட வரைபடத்தில் நாவல் மையினால் கோடிட்டு காட்டப்பட்டுள்ள 15 காணித்துண்டுகளும் (டீபு தொடக்கம் யுளு வரையிலான) யாருக்கும் பகிர்ந்தளிக்காத வெற்றுக்காணியாகக் காணப்படும்.
 
பச்சைமையினால் கோடிட்டு காட்டப்பட்டுள்ள, பூவரசங்குளம் கிராமத்தை நோக்கிய பகுதிக் காணிகள் யாவும் இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
 
மஞ்சள் மையினால் கோடிட்டு காட்டப்பட்டுள்ள பொன்தீவுகண்டல் கிராமத்தை நோக்கிய பகுதிக் காணிகள் யாவும் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .