2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட காணி அபகரிப்பு

Super User   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் நகர அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட காணியினை போலி ஆவணங்களை தயார் செய்து சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
மன்னார் நகர பகுதியில் நவீன கடைத்தொகுதி அமைத்தல் மற்றும் இதர பொது தேவைகளுக்காக வரைபடத்துடன் ஒதுக்கப்பட்ட  மன்னார் நகரசபையின் பராமரிப்பின் கீழ் உள்ள காணியை தனிநபர்கள் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் பொதுத்தேவைகள் கருதி இக்கிராம சனசமூக நிலைய மற்றும் மீன்பிடிச் சங்க பிரதிநிதிகள் மன்னார் நகர சபையிடம் பொதுத்தேவைக்காக கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இதன் காரணமாக கடந்த மாதம் நகர சபைக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு இவர்களின் கோரிக்கைக்கு சாதகமாக வரைபடத்தில் உள்ளவாறு முதலில் சுற்று வேலி அடைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந் நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் பணிப்பின் பேரில் சுற்று வேலிக்கு தேவையான தூண்களும் இறக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
 கடந்த திங்கட்கிழமை(31) தொழில்நுட்ப அலுவலகர் குறித்த இடத்திற்கு வேலைக்காகச் சென்ற போது ஒரு சில தனி நபர்கள் வேலிகள் அடைக்கப்பட்டு, போலியான ஆவணங்களை காண்பித்து அங்கு சென்ற அலுவலகரை வேலை செய்ய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

இப்பிரச்சினை தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மன்னார் நகரசபையின் தலைவர் உட்பட உப தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் மன்னார் பிரதேசச் செயலகத்திற்குச் சென்று மன்னார் உதவி பிரதேசச் செயலாளருக்கு இவ்விடையம் தொடர்பாக தெளிவுபடுத்தினோம்.
இந்த நிலையில் மன்னார் உதவி பிரதேச செயலாளர், காணி அதிகாரி ஆகியோர் எம்முடன் உரிய இடத்திற்கு வந்தனர்.

அக்காணிப்பகுதியில் நின்ற ஒரு சிலர் குறித்த காணிக்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், மன்னார் நகர சபை தங்களிடம் மாத்திரமே அதிகாரத்தை காட்டுவதாக தங்களது பாணியில் இதனை ஓர் இன முரண்பாடாக காட்ட முற்பட்டனர்.

அதற்கு நகர சபையினர் இடம் கொடுக்கவில்லை. ஆனால் நகர சபையினர் அவ்விடத்தில் பொறுமை காத்தனர். அவர்களிடம் இருந்த காணிக்கான ஆவணங்களை உதவி பிரதேச செயலாளரிடம் காட்டியுள்ளனர்.

 குறித்த ஆவணங்கள் போலியானது என தெரிய வந்ததோடு பிரதேச காணி பதிவேட்டில் அக்காணிக்கான பதிவு இல்லை என்றும் அறியக்கூடியதாக இருந்தது.
உடனடியாக நகர சபையின் தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் உதவி பிரதேச செயலாளருடன் மேலதிக அரசாங்க அதிபரை நாடி நடந்த சம்பவங்களை விளக்கி போலியான ஆவணங்கள் இருப்பது தொடர்பிலும் எடுத்துக்கூறினோம்.

அதற்கு உதவி அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல்,  உதவி பிரதேசசெயலாளரிடம்  குறித்த காணி தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த தரப்பினரால் அடைக்கப்பட்ட வேலியினை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாங்கள் மன்னார் நகர சபைக்கு உடனடியாக வந்ததோடு ஏற்கனவே 'யுனைப்ஸ்' நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நகரசபையின் தளபாடங்கள் அங்கே இருந்த நிலையில் அதற்காக காவலாளி ஒருவர் கடமையில் இருந்த போது திங்கட்கிழமை (31)   அப்பகுதியைச் சேர்ந்த இரு நபர்கள் அடாவடித்தனமாக அவ்விடத்திற்கு வந்து காவலாளியை துரத்தி விட்டு சுற்று வேலி அமைக்க முற்பட்டனர்.

உடனடியாக சபையின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.

எமது முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த நபர்களை அழைத்து விசாரனை செய்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானமாக செல்லுமாறு கோரி விடுதலை செய்தனர்.
சட்டரீதியாக மன்னார் நகர சபை சில வேலைத்திட்டங்களை செய்ய முற்படுகின்ற போது பொலிஸார் ஒத்துழைபபு வழங்குவதில்லை என்பதனை காட்டுகின்றது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (02) நாங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து நிலமைகளை விளக்கிக்கூறினோம். குறித்த காணி பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்த அரசாங்க அதிபர் உடனடியாக குறித்த காணிப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், அடாவடித்தனமாக காணி பிடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபர் உதவி பிரதேசச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

குறித்த காணிக்கு சுற்று வேலியினை அடைத்தவர்கள் அதனை இரு தினங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .