2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபர் பொலிஸ் காவலில்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு, புன்னை நீராவி பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன்  அனுமதியளித்துள்ளார்.

இச்சந்தேக நபரை  செவ்வாய்கிழமை (15) கைதுசெய்த கிளிநொச்சி பொலிஸார், அவரை வியாழக்கிழமை (17) நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.
இதன்போது, சந்தேக நபரை   பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரினர்.

இந்நிலையிலேயே, சந்தேக நபரை  24 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதவான்  அனுமதி வழங்கியுள்ளார்.
மாத்தறையைச் சேர்ந்த ராஜசுலோசனா (வயது 39) என்பவர்  புன்னை நீராவிப் பகுதியிலுள்ள ஆள்நடமாட்டமற்ற காணியொன்றிலிருந்த  கிணற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (13)  சடலமாக மீட்கப்பட்டார்.

இதன்போது, கிணற்றுக்கு  அருகில் இரத்தக்கறை இருந்தது.  இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தபோது, மோப்பநாய் புன்னை நீராவிப் பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுக் குடிலின் அருகில் போய் நின்றது.

இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த மேற்படி  நபர்  கைதுசெய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த பெண்ணின் கையடக்கத்தொலைபேசி மற்றும் பெண்ணைக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கூரிய ஆயுதமும் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையில்,  குறித்த பெண்ணின் சடலத்தை  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கர்ப்பிணியாக  இருந்தமை  தெரியவந்தது.
சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து மேலும் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், மேலும் 24 மணி நேரத்திற்கான நீதிமன்ற அனுமதியை பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--