2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பறங்கியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

மாந்தை  கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பறங்கியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு உடனடியாக தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் என மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயனந்தன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிப்பதற்கு கடந்த திங்கட்கிழமை வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினையும் தலைமை தாங்கி நடத்தினார்.

இதன்போது வடமாகாணத்தில் உள்ள யாழ்., கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மாவட்டத்தினுடைய களநிலவரங்கள் பற்றியும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பறங்கியாற்று நீரை மறைத்து வவுனின்குளம் மற்றும் ஏனைய குளங்களுக்கு நீரை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதுதொடர்பான கோரிக்கையொன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்,ஆகியோரிடம் விடுத்திருக்கிறேன்.

இதன்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், ஹூனைஸ் பாருக் எம்.பி.யும், பறங்கியாற்று திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விரிவான விளக்கங்களை வழங்கினார்கள்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, திட்டம் தொடர்பில் ஆய்வு செய்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .