2021 மே 06, வியாழக்கிழமை

திணைக்கள காணிகளில் குடியிருப்பவர்களுக்கான காணி உறுதிகள்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.குகன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள கிளிநகர் கிராம அலுவலர் பிரிவு பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குமாறு பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்ததின் நிமித்தம் அது தொடர்பான பரிசீலனைகள் தற்போது, இடம்பெற்று வருவதாக கரைச்சி பிரதேச செலயாளர் பொ.நாகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநகர் பகுதியில் 177 குடும்பங்கள், நீர்ப்பாசனத் திணைக்களம், மற்றும் ரயில்வே திணைக்களம் ஆகியவற்றின் காணிகளில் குடியிருக்கின்றனர். குடியிருக்கும் காணிகளை தங்களுக்குச் சொந்தக் காணிகளாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மக்கள் கோரினர்.

2009ஆம் ஆண்டு கிளிநொச்சியில் மீள்குடியேறிய பின்னர், கிளிநகர் பகுதியில் தாங்கள் குடியேறியபோதும், தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமையால் வீட்டுத்திட்டம் தங்களுக்கு கிடைக்கவில்லையென மக்கள் கூறினர்.

அரச காணிகளை அரசின் அனுமதி பெற்று பொதுமக்களுக்கு வழங்க முடியும். ஆனால் திணைக்களங்களுக்கான காணிகள் திணைக்களங்களின் அனுமதி பெற்றே வழங்கமுடியும்.

இது தொடர்பில் கடந்த காலங்களில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கிளிநகர் பகுதியை சென்று பார்வையிட்டனர்.

2012ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் தங்களது காணிகளை நிலஅளவையாளர்கள் மூலம் அடையாளப்படுத்தியிருந்தது. கிளிநகர் பகுதியில் காணி உறுதிப்பத்திரம் தேவையான 177 பேரின் பெயர் பட்டியல் வடமாகாண காணி ஆணையாளருக்கு கரைச்சி பிரதேச செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக நடவடிக்கைகள் எவ்விதம் இடம்பெறுகின்றது என அவரிடம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6500 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கவேண்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .