2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் கிளிநொச்சி நகரமயமாக்கல்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியை நகரமயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களில் சில திட்டங்கள் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மிகுதித் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

1950ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிளிநொச்சி நகரை நகரமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார, குடியிருப்பு, கடற்றொழில்சார், கைத்தொழில்சார், கல்விசார் மையங்களை உள்ளடக்கிய வலயங்கள் இந்த நகரமயமாக்கலில் உருவாக்க திட்டமிடப்பட்டன.

சர்வதேச மைதானம் அமைக்கும் பணிகள் பெருமளவுக்கு முடிந்த நிலையிலுள்ளது. மாவட்டச் செயலகத்துக்கு புதிய நவீன வடிவமைப்பிலான கட்டமும் பரந்தன் மற்றும் குமரபுரத்தில் தலா ஒவ்வொரு நீர்த்தாங்கிகள் அமைத்து மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன.

இதனைவிட ஆடைத்தொழிற்சாலையொன்று அமைக்கப்பட்டு செயற்படுகின்றது. கைத்தொழில் தொழில்நுட்ப கல்லூரியொன்று அமைப்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கிளிநொச்சி நகரத்தில் பூங்கா அமைக்கும் பணியானது திட்டம் வரையப்பட்டு, காணிகள் தொடர்பில் ஏற்பட்ட பிணக்குக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதேபோல், பஸ் நிலையம் இல்லாது காணப்படும் கிளிநொச்சிக்கு அதற்கான காணியை தேடுவதில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் இன்றுவரையில் வெற்றி காணாமையால், இதுவரையில் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை.

ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டும் அப்படியே கைவிடப்பட்ட நிலையிலுள்ளது.

மக்கள் உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் அனைத்து ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்ற நிலையிருந்த போதும், அதற்கான முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

புதிய அரசாங்கத்தின் காலத்தில் இந்த நடவடிக்கைகள் மீண்டும் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிணக்குகள் தீர்க்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .