2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மன்னாரில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய கைத்தொழில் வலயம் அமைக்க ஏற்பாடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார் மாவட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய கைத்தொழில் வலயமொன்றை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், அதற்கான முதலீடுகளை மேற்கொள்ள மன்னார் மாவட்டத்திலுள்ளவர்கள் இருப்பின் அவர்களுக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க தமது அமைச்சு தயாராகவுள்ளதாகவும் கூறினார்.

வடமாகாணத்துக்கான ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாவட்ட காரியாலயம் இன்று மன்னார் நகரில் திறந்து வைக்கப்பட்டதையடுத்து இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசும் போது கூறியதாவது,

'கடந்த 3 தசாப்த யுத்தமானது எமது நாட்டின் அபிவிருத்தியில் பெரும் தடங்கள்களையும் பின்னடைவுகளையுமே தோற்றுவித்துள்ளது. இன்று அந்த நிலை மாற்றப்பட்டுள்ளதுடன் எங்கும் அபிவிருத்தி புரட்சியினையே காணமுடிகின்றது.

அது வடக்கிலும் தற்போது துளிர் விட ஆரம்பபித்துள்ளது. அதனை முழமையாக வடமாகாணத்தில் நடை முறைக்கு கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.

தனக்கு கிடைத்துள்ள அமைச்சின் மூலம் அதனை செய்யமுடியும் என்ற நம்பிக்ககையுண்டு. அதற்காக வேண்டி வெளிநாட்டு முதலீட்டார்களையும்  வடமகாணத்துக்கு அழைத்துள்ளோம்.

இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும், தொழிற்திறமை வளர்ச்சியடையும், இதன் மூலம் நாட்டுக்கான பொருளாதார தரம் மேம்படும், அப்போது வருமானம் அதிகரிக்கும், அதன் மூலம் மக்களின் பொருளாதார துறை மேம்படும்.

எமது பிரதேசத்தில வாழும் இளைஞர், யுவதிகள் தொழில் பிரச்சினையினை எதிர்நோக்குகின்றனர். இதற்கு ஒரே தீர்வாக அரச நியமனங்களை மற்றும் நாம் எதிர்பார்த்திருக்க முடியாது. சுயதொழில் மற்றும் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களை நாடிச் செல்ல வேண்டும்.அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதி அபிவிருத்தி சபை மூலம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மன்னாரில் இதனது அலுவலமொன்று தி;றக்கப்பட்டதன் மூலம் பல நன்மைகள் மாவட்டத்தையும், மக்களையும் வந்தடையும்.

இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு முதலீட்டார்களை நாம் சந்திக்கின்றோம். வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களுடன் தொடர்புகளை எமது அமைச்சு கொண்டுள்ளது.

இதன் மூலம் எமது நாட்டின் தரமான உற்பத்திகளுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கின்றது. அதனை பயன்படுத்துவது குறித்து எமது கவனம் சென்றுள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் கல்வி, பொருளாதார, சுகாதார துறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து  கவனம் செலுத்திவருகின்றோம்.

தற்போதைய மழைக் காலத்தையடுத்து ஒரு வகையான காய்ச்சல் பரவுவதாக ஊடகங்கள் மூலம் அறிந்து அது குறித்து உரிய நடவடிக்ககையெடுக்குமாறு சுகாதார துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளோம்.

மன்னார், மாந்தை, நானாட்டான், மடு, முசலி பிரதச செயலகப் பிரிவுகளின் அபிவிருத்தி குழுக் கூட்டங்களை இரு மாதங்களுக்கு ஒரு தடவை நடத்தி மக்களது பிரச்சினைகளை செயலக மட்டத்தில் தீர்த்து கொள்வதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

எம்மீது சுமத்தப்பட்டுள்ள பணிகளை நாம் நேர்மையாக முன்னெடுக்கின்றோம். அதேபோல் அதிகாரிகள் மக்களது விடயங்களை கவனத்தில் எடுத்து தமது பணிகளை ஆற்ற வேண்டும். இதன் மூலம் அரச இயந்திரத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்' என்றும் அமைச்சர் றிசாத்  பதியுதீன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--