2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

'இணைந்த நேர அட்டவணை விவகாரம் சுமூகமானது'

Editorial   / 2019 டிசெம்பர் 10 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா புதிய பஸ் நிலையத்தில், முன்பு நடைமுறையில் இருந்த நேர அட்டவணையின் பிரகாரம், இன்று (10) முதல் பஸ் சேவைகளை முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் இணைந்த நேர அட்டவணையில் பயணத்தைத் தொடர்வதில் காணப்பட்டு வந்த இழுபறி நிலை தொடர்பாக, வவுனியா மாவட்டச் செயலகத்தில், வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ. எம். ஹனீபா தலைமையில், நேற்று (09) நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இச்சந்திப்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலை உத்தியோகத்திர்கள், தமது தரப்பில் முடிவுகளை எடுக்க முடியாதெனவும் தமது தலைமைப்பீடமே முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைமை அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதையடுத்து, இணைந்த நேர அட்டவணைக்கு இணங்கியிருந்தனர்.

இந்நிலையில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரதும் இலங்கைப் போக்குவரத்து சபையினரதும் உடன்பாட்டுடன், முன்பு நடைமுறையில் இருந்த நேர அட்டவணையின் பிரகாரம், இன்று (10) முதல் சேவையில் ஈடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது.

இச்சந்திப்பின் நிறைவின் பின்னர், புதிய பஸ் நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் ஆகியோர், பஸ் நிலையத்தைப் பார்வையிட்டனர்.

அத்துடன், இரு தரப்பு உத்தியோத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, சேவையை, இன்றில் இருந்து (10) ஒரு சில வாரங்களுக்க்குப் பரீட்சாத்தமாகச் செயற்படுத்தவும் இதன்போது ஏற்படும் பிரச்சினைகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்தனர்.

இந் நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தெவானந்தா, பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இரு தரப்பும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஓர் ஒழுங்கில் நடைமுறைப்படுத்த அவர்கள் இணங்கியுள்ளனரெனத் தெரிவித்த அவர், ஆகவே, இரண்டு வாரங்களுக்கு இதனை பரீட்சாத்தமாகச் செயற்படுத்தி, பின்னர் இதில் குறைபாடுகள் காணப்படுமாயின், அவற்றை திருத்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆகவே, நேற்று (09) எடுக்கப்பட்ட முடிவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், டக்ளஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--