2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டுக்கான நேரம்?

Gopikrishna Kanagalingam   / 2017 மே 22 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்கும் இரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்கும் இரசிகர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளின் போது, "இலங்கை அணியில் தமிழர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. ஏன்?" என்ற கேள்வி எழுப்பப்படும். அதற்கு இலங்கை இரசிகர்கள், முத்தையா முரளிதரனின் பெயரை உச்சரிப்பார்கள்.

ஆனால், இலங்கை அணியில் சிறுபான்மை இனத்தவர்கள் குறைவாக இடம்பெறுவது என்பது, பிரச்சினையாகவே காணப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய இரசிகர்கள் முறையிடுவது போல, பாகுபாட்டால் ஏற்பட்ட நிலைமை கிடையாது. மாறாக, போர்க் காலத்தில், வடக்கு, கிழக்குக்கும் தெற்குக்கும் இடையிலான தொடர்பு, இல்லாது காணப்பட்ட நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள திறமையான வீரர்கள், தங்களை நிரூபிக்க முடியாது போனது.

போர் நிறைவடைந்து 7 ஆண்டுகள் சென்றுள்ள போதிலும், வடக்கு, கிழக்கு வீரர்கள், பாரியளவு தடைகளை எதிர்நோக்குகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும், சொற்ப அளவிலான மைதானங்களிலேயே, புல் ஆடுகளம் காணப்படுகிறது. பெரும்பான்மையான மைதானங்களில், "மற்றிங்" என அழைக்கப்படும் ஆடுகளமே காணப்படுகிறது.

அவ்வாறான மற்றிங் ஆடுகளங்களில் பல ஆண்டுகள் விளையாடிப் பழகிக் கொண்ட வீரர்கள், புல் ஆடுகளத்தில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வீரர்கள், தேசிய மட்டத்தில் தங்களை வெளிப்படுத்துவதில் இன்னமும் பிரச்சினைகளைக் கொண்டிருக்க வழிசெய்கிறது. தவிர, அவ்விரு மாகாணங்களிலும் காணப்படும் கிரிக்கெட் கட்டமைப்பு, இன்னமும் முழுமையாக முன்னேறவில்லை என்பதுவும் உண்மையானது. ஆகவே, இலங்கை அணியில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுவது என்பது, அண்மைய எதிர்காலத்தில், சாத்தியம் குறைவான ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் சபையால், மாவட்டங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்று நடத்தப்பட்டது. இதன் இறுதிப் போட்டி, நேற்று இடம்பெற்றது. இதில், இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த அணிகள், விளையாடின.

ஆனால் அங்கு பிரச்சினை என்னவெனில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற அணிகள், முழுவதும் பெரும்பான்மையின வீரர்களைக் கொண்ட அணிகளாகவே இருந்தன. அந்தந்த அணிகளில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சிலர் கூட இடம்பிடிக்கவில்லை என்பது, வருத்தத்துக்கு உரியதாக அமைந்தது.

யதார்த்தமொன்றைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. யாழ்ப்பாண அணியை எடுத்துக் கொண்டால், யாழ்ப்பாணத்தில் வாழும் வீரர்களைக் கொண்ட அணியாக அவ்வணி அமைந்தால், கொழும்பு போன்ற அணிகளுடன், அவ்வணியால் போட்டியிட முடியாது என்பது உண்மை. இரண்டு மாவட்டங்களுக்கும் இடையிலான வித்தியாசம், அவ்வளவு அதிகமாக இருக்கிறது. ஆகவே, மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட வீரர்கள் மாத்திரம் விளையாட வேண்டுமென்பது கோரிக்கை கிடையாது.

மாறாக, அந்தந்த மாவட்டங்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டு, பெரும்பான்மையின வீரர்கள் மாத்திரம் விளையாடும் தொடராக அது அமைந்தது தான், கவலைக்குரியது. ஒன்றில், அந்தந்த மாவட்ட அணிகளில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையான வீரர்கள் விளையாட வேண்டும் என்ற விதியை வைத்திருக்கலாம். அதன்மூலம், புதிய திறமைகளை வெளிக்கொண்டுவந்திருக்கலாம்.

இல்லாவிடில், வடக்கு, கிழக்கிலுள்ள சில மாவட்டங்களை இணைத்து, இணைந்த அணிகளாக விளையாடச் செய்திருக்கலாம். முரளி கிண்ணப் போட்டிகளில், இந்த இணைந்த அணிகள் விளையாடுகின்றன. அதை அவர்கள், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கின் விளையாட்டு நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், இவ்வாறான ஏதாவதொரு விடயத்தைச் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. அதைவிட்டு விட்டு, தற்போது இருக்கின்ற மாதிரியான நடைமுறையில் விடயங்களைச் செய்தால், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வீரர்கள், தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பே இல்லாது போகும்.

இந்த நிலையில் தான், கிரிக்கெட் வீரர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளையும் ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

தற்போதிருக்கும் நிலையில், தமிழ் வீரர் ஒருவரும் முஸ்லிம் வீரர் ஒருவரும், தேசிய அணியில் நிச்சயம் இடம்பிடிக்க வேண்டும் என்ற விதி கொண்டுவந்தால், நிச்சயமாக முன்னேற்றகரமான விளைவுகள் ஏற்படாது. அத்தோடு, அணியின் பலமும் குறைவடைய வாய்ப்புகளுண்டு.

மாறாக, கழக மட்டங்களில், இட ஒதுக்கீடு சம்பந்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முடியும். ஏனெனில், இலங்கையில் சுமார் 25 சதவீதமான சனத்தொகை, நாட்டின் தேசிய அணியில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்பது, சாதாரணமான விடயம் கிடையாது. எனவே, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இட ஒதுக்கீடு என்று வந்தால், கழகங்களின் விளையாட்டுத் திறன் குறைவடையும் என, சிலர் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால், இந்தப் பருவகாலம் ஆரம்பிக்கும் போது, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, டெஸ்ட் தரப்படுத்தலில் 7ஆவது இடத்தில் காணப்பட்டது. அவ்வணியில், இட ஒதுக்கீட்டு விதிகள் காணப்படுகின்றன. அவ்வணி தற்போது, 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .