2021 மே 08, சனிக்கிழமை

ரக்பி உலகக்கிண்ணம்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்பி உலகக்கிண்ண தொடர், இங்கிலாந்தில் அண்மையில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. கடந்த 18 ஆம் திகதி ஆரம்பித்த இந்த தொடர் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 20 நாடுகள் பங்குபற்றும் இந்த தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஐந்து அணிகள் ஒரு குழுவில் இடம்பெறுகின்றன. நான்கு குழுக்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். அதன் பின்னர் நொக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். அரை இறுதிப் போட்டிகள், மூன்றாமிட இறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என இந்த தொடர் நடைபெறவுள்ளது. காற்பந்தாட்டம் போன்று மிகவும் விறு விறுப்பான, வேகமான போட்டியான ரக்பி உலகில் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கின்றது. 

1987ஆம் ஆண்டு முதலாவது உலகக்கிண்ண தொடர் நடைபெற்றது. 16 அணிகள் பங்குபற்றிய தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி'29 இற்கு 9 என்ற அடிப்படையில் பிரான்ஸ் அணியை வெற்றி பெற்றது. மூன்றாமிடத்தை ஆஸ்திரேலியாவை 22 இற்கு 21 என்ற அடிப்படையில் வேல்ஸ் வெற்றி கொண்டு தனதாக்கியது. நியூசிலாந்து அணியின் கிரான்ட் பொக்ஸ் 126 புள்ளிகளைப் பெற்று கொடுத்து கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது உலகக்கிண்ணம் ஐரோப்பிய கண்டத்தில் ஐந்து நாடுகள் இணைந்து நடத்தின. பிருத்தானிய நாடுகளான   இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுடன்  பிரான்ஸும இணைந்து நடாத்தின. 32 அணிகள் பங்குபற்றிய தொடரில் ஆஸ்திரேலியா அணி 12 இற்கு 6 என்ற புள்ளிகளின் படி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்று சம்பியன் ஆகியது. அப்போதைய நடப்பு சம்பியன் நியூசிலாந்து அணி 13 இற்கு 6 என்ற புள்ளிகளின்  அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி பெற்று மூன்றாமிடத்தை கைப்பற்றியது. அயர்லாந்து அணியின் ரல்ப் கெய்ஸ் 68 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்து கூடுதலான புள்ளிகளைப் பெற்றவராக திகழ்ந்தார்.

மூன்றாவது உலகக்கிண்ணத் தொடர் 1995 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்றது. சர்வதேச ரக்பி காற்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் அழைப்பு நாடுகள் 9 உடன் இணைந்து 16 ஆக நடைபெற்று வந்த தொடர் முதற் தடவையாக தெரிவுகான் போட்டிகளின் அடிப்படையில் 16 நாடுகள் தெரிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு தொடர்களிலும் பங்குபற்றி இருக்காத தென் ஆபிரிக்கா அணி தனது சொந்த நாட்டில் சம்பியன் ஆகியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 15 இற்கு 12 என நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றே சம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 19 இற்கு 9 என்ற புள்ளிகளின் படி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை தனதாக்கியது. பிரான்சின் தியேறி லகோரிக்ஸ் 112 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார். 95 ஆம் ஆண்டு தொடரில் இவரே கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது தடைவையாக சம்பியன் ஆகியது. முதற் தடவையாக 20 நாடுகள் உலகக்கிண்ணத்தொடரில் பங்குபற்றின. வேல்ஸ் உடன் இணைந்து இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தி இருந்தன. 65 நாடுகளில் இருந்து 20 நாடுகள் தெரிவாகி  இறுதித் தொடரில் பங்குபற்றின. ஆஸ்திரேலியா அணி பிரான்ஸ் அணியை 35 இற்கு 12 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் ஆகியது. மூன்றாமிடத்தை நியூசிலாந்தை 22 இற்கு 18 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று தென்ஆபிரிக்கா அணி கைப்பற்றிக் கொண்டது. ஆர்ஜன்டினா நாட்டின் கொன்சலா கியூஸ்டா 102 புள்ளிகளை கூடுதலான புள்ளிகளாகப்பெற்றுக்கொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து அணி மேலதிக நேரத்தில் 20 இற்கு 17 என்ற புள்ளிகளின் படி போட்டிகளை நடாத்திய ஆஸ்திரேலியா அணியை வெற்றி கொண்டு முதற் தடவையாக சம்பியன் ஆனது. நியூசிலாந்து அணி 40 இற்கு 13 என்ற புள்ளிகளின் படி பிரான்ஸ் அணியை வெற்றி கொண்டு மூன்றாமிடத்தை கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் ஜொனி வில்கின்சன் 113 புள்ளிகளை கூடுதலான புள்ளிகளாகப் பெற்றுக் கொண்டார். இந்த தொடரில் 80 நாடுகள் தெரிவுகாண்  போட்டிகளில்  விளையாடி இருந்தன.

2007 ஆண்டு தொடரை பிரான்ஸ் உடன் இணைந்து ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் நடாத்தின. 91 நாடுகள் தெரிவுப் போட்டிகளில் மோதி 20 நாடுகள் இறுதித் தொடரில் விளையாடின. தென் ஆபிரிக்கா 15 இற்கு 6 என்ற புள்ளிகளின் படி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியது. தென் ஆபிரிக்காவின் பேர்சி மொண்கொமேறி 105 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்.   மூன்றாவது இடத்தை முதற் தடவையாக ஆர்ஜன்டினா அணி பெற்றுக்கொண்டது. இந்த தொடரிலேயே ஆரஜன்டினா அணி அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது. 34 இற்கு 10 என்ற புள்ளிகளினால் பிரான்ஸ் அணியை  ஆர்ஜன்டினா அணி வெற்றி பெற்றது.

2011 ஆண்டு தொடரில் 91 நாடுகள் தெரிவுப் போட்டிகளில் விளையாடின. இவற்றில் இருந்து 20 நாடுகளே இறுதிப் போட்டி தொடரில் விளையாடின. நியூசிலாந்து அணி 14 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியது. நியூசிலாந்து 8 இற்கு 7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பிரான்ஸ் அணியை வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியா அணி முதற் தடவையாக மூன்றமிடத்தை பெற்றது. வேல்ஸ் அணியை 21 இற்கு 18 என்ற புள்ளிகளின் படி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவின்  மோர்னி ஸ்டைன் 62 புள்ளிகளைப் பெற்று கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த காலங்களில் பலமாக திகழ்ந்த அணிகளே இம்முறையும் பலமாக இருக்கின்றன. 102 நாடுகளில் இருந்து 20 நாடுகள் இம்முறை இறுதி தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இங்கிலாந்து தனி நாடாக இம்முறை தொடரை நடாத்துகின்றது. உலகக்கிண்ண ரக்பி தொடர் ஆரம்பிக்கின்ற வேளையில் அதிக அக்கறை இலங்கையில் உள்ளவர்கள் மத்தியில் இல்லாது இருந்தது. ஆனாலும் சில போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பலருக்கு இந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருவாக்கப்பட ரக்பி விளையாட்டின் உலகக்கிண்ண தொடர் பற்றிய கடந்த கால முக்கிய விடயங்களை இங்கே தந்துள்ளோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X