2019 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

கொலை குற்றவாளிக்கு சிறையில் திருமணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கொலை குற்றவாளிக்கு சிறை வளாகத்துக்குள் திருமணம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் நபா பகுதியைச் சேர்ந்தவர் மன்திப் சிங் என்ற துருவ். 

பஞ்சாயத்துத் தலைவரை கொலை செய்த குற்றத்துக்காக, இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 வயதான இவர், இதுவரை பத்து வருடங்களை சிறையில் கடந்துவிட்டார். 

இந்த நிலையில் இவருக்கு கன்னா பகுதியைச் சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க, குடும்பத்தினர் முடிவு செய்தனர். தனக்கு திருமணம் நடக்க இருப்பதால் பரோல் வழங்க வேண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் துருவ். 

ஆனால், இதை வைத்து அவர் தப்பிக்கத் திட்டமிடுகிறார் என்றும் பரோல் வழங்கக் கூடாது என்றும் பொலிஸார் கடுமையாக எதிர்த்தனர்.  இதனால் நீதிமன்றம் பரோல் வழங்க மறுத்துவிட்டது. 

இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு துருவின் புகைப்படத்தை வைத்து பவன்தீப் கவுர் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், பரோல் கேட்டு மீண்டும் முறையிட்டார் துருவ். 

இதனை விசாரித்த நீதிமன்றம், சிறை வளாகத்திலேயே திருமணம் செய்துகொள்ள 6 மணி நேரம் அனுமதி கொடுத்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறைக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து நபா சிறைக்குள் இருக்கும் குருத்வாராவில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

அவர்கள் முன்னிலையில் நேற்று (30) திருமணம் நடந்தது. மணமக்களை அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் பொலிஸார் வாழ்த்தினர்.  ஆறு மணி நேரத்துக்குப் பின் சிறைக்கு அனுப்பப்பட்டார் துருவ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Tweets by Tamilmirror