சர்வதேசத்தில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்

- மு. தமிழ்ச்செல்வன்

விளையாடுவதற்கு மைதானம் இல்லை. தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை. முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை. பொருளாதார வசதியின்மை. இப்படி எதுவுமே இல்லை. ஆனால், தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின் ஊக்குவிப்பும் வழிநடத்தலும் இருந்தது. அதுவே தேசிய அணியில் இடம்பெறச் செய்தது. இதுவே அவர்களை சர்வதேச போட்டி ஒன்றிலும் சாதிக்க வைத்தது.

கிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தைச் சேர்ந்த நடராசா வினுசா, தினகராஜா சோபிகா ஆகியோர் இலங்கை “றோல் போல்” அணியின் வீராங்கனைகள். கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பாடசாலை அணியில் விளையாடி, கிளிநொச்சி மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு அந்த அணியிலும் சிறப்பாக விளையாடி இலங்கையின் தேசிய “றோல் போல்” அணியில் இடம்பிடித்து தங்களது திறமையை வெளிக்காட்டி சர்வதேச அளவில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் கலந்துகொண்டு சாதனையாளர்களாக திரும்பியிருக்கின்றார்கள். 

கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்கமில் இடம்பெற்ற ஆசிய “றோல் போல்” போட்டியில் இலங்கையணியும் பங்குபற்றியிருந்தது. இலங்கை, இந்தியா, பங்காளதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் பெண்கள் பிரிவில் பங்குபற்றியிருந்தன. இதில், இந்தியா சம்பியனானதுடன், பங்காளதேஷ் இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தன. 

இத்தொடரில், இலங்கையணியின் வினுசா, இலங்கை, இந்திய அணிகளுக்கிடையேயான போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டமை நாட்டுக்கும் கிளிநொச்சிக்கும் பெருமையே.

கிளிநொச்சி மருதநகர் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள நெல் உலரவிடும் தளமே இவர்களது விளையாட்டு மைதானம். நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற விக்ரர் சுவாம்பிள்ளை என்பரே இவர்களது பயிற்றுவிப்பாளர். அவரும் தன்னுடைய வேலைப் பளுவுக்கு மத்தியில் இவர்களுக்கான பயிற்சியை வழங்கியிருக்கின்றார். 

இந்த இரண்டு யுவதிகளும் சாதித்துவிட்டு ஊர் திரும்பியபோது கிடைத்த பாராட்டுகளும், சந்தித்து வாழ்த்து தெரிவித்தவர்களும், போட்டிக்கு முன் இவர்களுக்கான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கியிருந்தால் நிச்சயம் இவர்களின் சாததனை வேறு விதமாக மாறியிருக்கலாம். அது நாட்டுக்கும் மாவட்டத்துக்கும் பெருமையையும் புகழையும் ஏற்படுத்தியிருக்கும். வெற்றிபெற்ற பின்பு கொண்டாடி உரிமை கோருகின்ற சமூகம் வெற்றிபெறுவதற்கு முன் அதற்கான சூழலையும், உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்காதிருப்பது அல்லது அக்கறையின்றி இருப்பது கவலைக்குரியது.

இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியா செல்ல வேண்டும் அதற்கான பயணச் செலவுகள் ஒவ்வொருவருக்கும் 79,000 ரூபாய் செலுத்த வேண்டும் என இலங்கை “றோல் போல்” சம்மேளனம் அறிவித்துவிட்டது.  ஒரு சர்வதேசப் போட்டிக்குச் செல்கின்ற அணியின் செலவுகளை அரசாங்கம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை இந்த விளையாட்டைப் பொறுத்தவரை அரசாங்கம் அக்கறையின்றியே இருந்துள்ளது. இலங்கையில் அரசாங்கம் கிரிக்கெட் போட்டிக்கு கொடுகின்ற முக்கியத்துவம் போன்று ஏனைய விளையாட்டுக்களுக்கு கொடுப்பதில்லை என்ற விமர்சனம் இங்கேயும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வீராங்கனைகளின் குடும்ப பொருளாதாரமும் மிகவும் கீழ் நிலையில் காணப்படுகிறது. ஒரு வீராங்கனையின் தந்தை தொழிலுக்கு செல்ல முடியாத வயோதிப நிலை. அவரது குடும்பத்தை அவர்களது திருமணம் செய்த சகோதரர்களே கவனித்து வருகின்றனர். அவர்களும் நாளாந்த உழைப்பாளர்களே. மற்றொரு வீராங்கனையின் தந்தை கூலித் தொழில். ஏனைய சகோதரிகளின் கல்விச் செலவு உள்ளிட்ட குடும்பச் செலவையும் ஈடுசெய்ய முடியாத நிலை. இந்நிலையில், குறித்த இரண்டு வீராங்கனைகளும் மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், உள்ளிட்ட பலரிடம் இந்தியா செல்வதற்கான உதவியை கோரி நின்றார்கள். ஆனால், எவரும் கைகொடுக்கவில்லை.

இறுதியில், உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தலா 50,000 ரூபாயையும், அவ்விளையாட்டுக் கழகத்தைச்சேர்ந்த ஒருவர் தலா 10,000 ரூபாயையும் வழங்கினார்கள். மிகுதியை கடனாகப் பெற்று இலங்கை அணியின் சார்பாக இந்தியா சென்று சாதித்து விட்டு குறித்த வீராங்கனைகள் திரும்பியிருகின்றார்கள்.

தாங்கள் இந்தியாவுக்கு செல்வோமா? போட்டியில் பங்குபற்றுவோமா? இதுவரை காலமும் விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்தது பயனற்று போய்விடுமா? சர்வதேச போட்டி ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு ஏழைகளுக்கு கிடைக்காதா போன்ற கேள்விகளுடன் போட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு கிடைத்தது முதல் தங்களின் பயணம் உறுதிசெய்யப்படும் அந்த நாள் வரை தங்களின் மனங்களை பெரிதும் வருத்தியதாக தெரிவித்த அவர்கள் மிகப்பெரிய விரக்கத்தியில் இருந்தாகவும் குறிப்பிட்டனர்.

ஒருவேளை இந்த இரண்டு வீராங்கனைகளும் இப்போட்டியில் சாதிக்காது நாடு திரும்பியிருந்தால்   இவர்களை அனைவரும் மறந்திருப்போம்.  இம்முறை வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது பரவாயில்லை அடுத்து முறை சாதிப்போம் அதற்காக இன்று முதல் தயாராகுங்கள். பயிற்சி பெறுங்கள் ஏற்பாடுகளை நாம் செய்கின்றோம் என்று கூறுவதற்கு இங்கு எவரும் இருந்திருக்கமாட்டார்கள். அதிர்ஷ்டம் இவர்கள் சாதித்தது. 

தாங்கள் இந்த வெற்றிக்காக கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடசாலை அதிபர் முதல் பாடசாலை சமூகம், தங்களின் பயிற்றுவிப்பாளர் விக்ரம் சுவாம்பிள்ளை, வறுமையிலும் எங்களின் முயற்சிக்கு ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர்கள், உதவிய உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம், அக்கழகத்தை சேர்ந்த எமக்கு நிதியுதவி வழங்கிய நல்லுள்ளம் கொண்டவருக்கும் மனம்நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம் எனத் தெரிவித்த சாதனை வீராங்கனைகள், விளையாடுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் மைதானம், ஊக்குவிப்புகளும் ஒத்துழைப்புகளும் தேவை எனவும் கோருகின்றனர்.

சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் உரிமை கோரி கொண்டாடும் நாம் அதற்கு முன் அதற்கான சூழலையும், ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும். எங்கள் சமூகத்தில் இவர்கள் போன்று இன்னும் ஏராளமானவர்கள் இலைமறை காய்களாக உள்ளனர். அவர்களுக்கு விக்ரர் சுவாம்பிள்ளை போன்றோ, இந்துக் கல்லூரி போன்றோ, இவர்களின் பெற்றோர் போன்றோ இருந்திருந்தால் அவர்களும் வெளியில் வருவார்கள்.


சர்வதேசத்தில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.