நாட்டின் இறப்பர் உற்பத்தி பாதிப்பு: முதலாளிமார் சம்மேளனம்
19-04-2014 07:28 PM
Comments - 0       Views - 746

கடந்த ஆண்டுகளை போலல்லாமல், இறப்பர் விலை குறைவடைந்துள்ளது, இதன் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவீனமும் அதிகரித்துள்ளது என கொழும்பு இறப்பர் விற்பனையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.ரஹீம் தெரிவித்திருந்தார். தேசத்தின் உற்பத்திக்கு பிரதான பங்களி;பபை வழங்கும் சொத்துக்களில் ஒன்றாக திகழும் இறப்பர் செய்கை, சமீப காலமாக இந்த இடர் நிலையை எதிர்நோக்கியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இயற்கை இறப்பர் உற்பத்தி மூலமாக வருமான அதிகரிப்பு கடந்த எட்டு வருடங்களில் தொடர்ச்சியாக பதிவாகியிருந்தது. இந்த உயர்ந்த நிலை 2012ஆம் ஆண்டுடன் நிறைவடைந்திருந்தது. 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பு இறப்பர் ஏல விற்பனை விலைகளை கருத்தில் கொண்ட போது, 2010 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த விலைகளை விட குறைவாகவே பதிவாகியிருந்தமை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இலங்கையின் புகழ்பெற்ற உற்பத்தியான உயர் தரம் வாய்ந்த Crepe No. 1X ரகம் அதிகளவு பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது.

ரஹீம் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், '2013 இல், சந்தை பெறுமதிகள் சற்று உயர்வடைந்திருந்தன. இந்த விலை உயர்வடைந்து 400 ரூபாவாக பதிவாகியிருந்தது. முதலாவது காலாண்டில், இந்த உயர்ந்த பெறுமதி பதிவாகியிருந்த போதிலும், இரண்டாம் காலாண்டில் சற்று வீழ்ச்சி பதிவாகிய போதிலும், விலை 400 ரூபாவாக காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் முதல் latex crepe விலை வீழ்ச்சியடைந்து 305 ரூபாவாக பதிவாகியிருந்தது.

ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இறப்பர் ஏல விற்பனை விலை latex crepe வகைகளுக்கு 300 – 230 ரூபாவாக பதிவாகியிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இறப்பரின் விலை 50 வீதத்துக்கும் மேலாக குறைந்து 600 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக பதிவாகியிருந்தது.

மற்றுமொரு கவனத்தை ஈர்த்திருந்த விடயமாக, சர்வதேச ரீதியில் இறப்பர் வியாபாரத்தில் நிலவும் சவால்கள் நிறைந்த நிலைகளான விலைச் சரிவுகள், இவற்றின் தாக்கம் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட் கம்பனிகள் ஆகியவற்றில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தமை, சமூக பொருளாதார பாதிப்புகள் மற்றும் இதர சிக்கல் நிறைந்த நிலைகள் அமைந்திருந்தது.


விலைச் சரிவுகள்
சுமார் ஒரு தசாப்த காலமாக உயர்ந்த பெறுமதிகளை அனுபவித்த இலங்கையின் இறப்பர் துறை, அண்மையில் விலைச்சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலை தொடர்பாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உப தலைவர் எஸ்.எஸ்.பொஹொலியத்த கருத்து தெரிவிக்கையில், 'இது சர்வதேச ரீதியில் நிலவும் சூழ்நிலைக்கு அமைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நிலை மந்தமாக காணப்படுகிறது. இந்த நிலை சர்வதேச ரீதியில் இறப்பர் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது'.

'உலகின் இறப்பர் சார்ந்த பாரிய உற்பத்தி நடவடிக்கைகள் சீனா மற்றும் இந்தியாவில் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக இந்த நாடுகளின் இறப்பர் உற்பத்தி அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இறப்பர் விலை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2010 அல்லது 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 600 ரூபாவாக காணப்பட்ட இறப்பரின் விலை தற்போது 300 ரூபா எனும் அளவுக்கு குறைந்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உற்பத்தி சவால்கள்
உற்பத்தி செலவீனம் என்பது இறப்பர் உற்பத்தியை பொறுத்தமட்டில் சவால் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது உற்பத்தி செலவீனம் என்பது அதிகரித்துக் காணப்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் பெருந்தோட்ட ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உற்பத்தி செலவீனம் என்பது கிலோ ஒன்றுக்கு மேலும் 20 – 25 ரூபாவால் அதிகரித்திருந்தது. சம்பள அதிகரிப்பு என்பது எதிர்காலத்தில் தவிர்க்கப்பட முடியாத ஒன்று. உற்பத்தி செலவீனத்தை கட்டுப்படுத்துவது குறித்த மாற்று கொள்கைகளை பின்பற்ற வேண்டிய தேவையை நாம் கொண்டுள்ளோம்' என வயம்ப பல்கலைக்கழகத்தின் பெருந்தோட்ட முகாமைத்துவ பிரிவின் பேராசிரியர் அசோக நுகவெல கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இறப்பரில் சுமார் 70 வீதமானவை உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சிய பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு வருமானம் கிடைக்கிறது.

பேராசிரியர் நுகவெல இந்த துறையின் வளர்ச்சிக்கு கொள்கை ரீதியிலான சில மாற்றங்களை ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என கருத்து தெரிவித்திருந்தார். உயர் தரம் வாய்ந்த இறப்பரை போட்டிகரமான விலையில் விநியோகிப்பதன் மூலம் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மால் சிறந்த சூழலை ஏற்படுத்த முடியும் என்பதுடன், தேசத்தின் பெறுமதி மேம்படுத்தலுக்கு எமது பங்களிப்பை வழங்கவும் முடியும் என்றார்.


சிறு உற்பத்தியாளர் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பாதிப்பு
இலங்கையை பொறுத்தமட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த இறப்பரில் 60 வீதம் சிறு பயிர்ச்செய்கையாளர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உற்பத்தியின் உளவு சரிவடையும் போது, பெருமளவில் சிறு உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறைந்த விளைச்சல் காரணமாக, குறைந்த விலைகளிலேயே தமது உற்பத்திகளை விற்பனை செய்ய வேண்டிய நிலையை எய்துவார்கள்.

இவ்வாறு தொடர்ந்து குறைந்த விளைச்சல் மற்றும் குறைந்த விலைகளை எய்தும் சிறு உற்பத்தியாளர்கள் தமது பயிர்ச்செய்கை நிலங்களை வேறு உற்பத்திகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்கின்றனர். இலங்கை இறப்பர் விற்பனையாளர்களின் சங்கத்தின் 2012/2013 அறிக்கைக்கு அமைவாக சிறு பயிர்ச்செய்கையாளர்களின் விளைச்சல்களுக்கு உயர்ந்த விலை பெறப்பட வேண்டியது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏல விற்பனையில் பெறப்படும் விலைகள் மூலம் தமது உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லக்கூடிய நிலையில் அவர்கள் இருத்தல் வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு பயிர்ச்செய்கையாளர்களும் பாதுகாக்கப்படல் வேண்டும். இந்த பரிபூரண செயற்பாட்டில் சிறு பயிர்ச்செய்கையாளர் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். விலைகளில் தளம்பல்கள் ஏற்பட்ட போதிலும், இறப்பர் உற்பத்திலியில் சரிவு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலைகளில் ஏற்படும் சரிவு என்பது பெருந்தோட்ட கம்பனிகளின் செயற்பாடுகளையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏல விற்பனையில் கிலோ ஒன்றில் 100 ரூபா விலைச் சரிவு ஏற்பட்டால் அது இரு தரப்பினருக்கும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

சூழல் மற்றும் நில பிரச்சனைகள்
துறையின் போட்டிகரத் தன்மை மற்றும் நீண்ட கால செயற்பாடு என்பது சிறு தோட்டங்களில் இயற்கை இறப்பர் செய்கையில் ஈடுபடும் பயிர்ச்செய்கையாளர்களுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. போதியளவு இறப்பர் சேகரிப்பாளர்கள் இன்மை, வனப்பாதுகாப்பு மற்றும் விவசாய சார் பிரச்சனைகளும் கலந்துரையாடப்படல் வேண்டும்.

இறப்பர் செய்கைக்காக நாம் கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவு மற்றும் காணி அபகரிப்பு போன்றன சவால்களாக அமைந்துள்ளன. மேலும், உற்பத்தியாளர்களின் பற்றாக்குறை என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினர் இந்த தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவதில்லை.

துறையில் காணப்படும் இந்த சிக்கல் நிலைகளின் காரணமாக, நிலையான வளர்ச்சியை எய்துவது தொடர்பில் நாம் நோக்கம் ஒன்றை வகுத்து செயற்பட வேண்டும். குறிப்பாக உற்பத்தி திறன் போன்ற உற்பத்தி செலவுடன் தொடர்புடைய காரணிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

பொது துறையின் பங்களிப்பு
உற்பத்தி மற்றும் விலைச் சரிவு போன்றன துறையில் சரிவில் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளன. தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பெருமளவான மக்கள் இந்த துறையில் தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

மேலும் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்படும் பகுதியை விஸ்தரிப்பது தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆரம்ப கட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பாரம்பரியமற்ற பகுதிகளில் கூட இறப்பர் செய்கையை மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. மொனராகலை, அம்பாறை மற்றும் வட மத்திய மாகாணத்தின் பகுதிகளைச் சேர்ந்த சிறு தொழில் முயற்சியாளர்கள் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க முகவர் அமைப்புகள் மீள் பயிர்ச்செய்கை மற்றும் புதிய செய்கை போன்றவற்றுக்கு சகாய விலை அடிப்படையிலான உதவிகளை வழங்க முன்வர வேண்டும். அத்துடன் புதிய பகுதிகளில் இறப்பர் செய்கையை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். 

எதிர்கால செயற்பாடுகள்
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பொஹோலியத்த கருத்து வெளியிடுகையில், 'பெறுமதி சேர்க்கும் தொழிற்சாலைகள் தடைகளின்றி தொடர்ந்தும் இயங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். பெருமளவானோர் இந்த இறப்பர் துறையில் தமது எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். இலங்கையின் இறப்பர் துறை என்பது வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். வெளிநாடுகளைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்களை இலங்கைக்கு வரவழைத்து அவர்களின் உற்பத்தி பகுதிகளை இங்கு நிறுவச் செய்ய வேண்டும். இதன் மூலமாகவே இலங்கையின் இறப்பர் உற்பத்தி துறையை தொடர்ந்தும் நிலையான முறையில் பேண முடியும் என நான் கருதுகிறேன்' என்றார்.

விலைச் சரிவுகள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு என்பன தவிர்க்க முடியாத விடயங்களாக அமைந்துள்ளன. இந்த சவாலை எதிர்நோக்கக்கூடிய வகையில் நாம் தயாராக இருத்தல் வேண்டும். பெருந்தோட்டத் துறை முகாமைத்துவ செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட வேண்டும்.

இலங்கையின் இறப்பர் பயிர்ச்செய்கை என்பது 1876 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகியிருந்தது. கம்பஹா பகுதியின் ஹெனரத்கொட தோட்டப்பகுதியில் முதலாவது இறப்பர் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இறப்பர் செய்கை என்பது நம் நாட்டின் பாரம்பரிய பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் இயற்கை இறப்பர் உற்பத்தியில் ஈடுபடும் சிறந்த பத்து நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது.
"நாட்டின் இறப்பர் உற்பத்தி பாதிப்பு: முதலாளிமார் சம்மேளனம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty